தென்மாவட்ட பணியிடம் கேட்கும் நர்ஸ்கள்; சென்னையிலிருந்து வெளியேற விருப்பம்
தென்மாவட்ட பணியிடம் கேட்கும் நர்ஸ்கள்; சென்னையிலிருந்து வெளியேற விருப்பம்
UPDATED : நவ 12, 2024 03:51 AM
ADDED : நவ 11, 2024 11:20 PM

சென்னை: அரசு மருத்துவமனை நர்ஸ்கள் பணியிட மாறுதலுக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நிரந்தர நர்ஸ்களுக்கான, இரண்டு நாள் பொது கவுன்சிலிங், அந்தந்த சுகாதார மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவங்கியது.
முக்கிய பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு, கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுவதாக நர்ஸ்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, 1,228 இடங்கள் காலியாக இருப்பதாக, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும், 190 இடங்கள் காட்டப்பட்டுள்ளன.
அரியலுார், கரூர், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காலி இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பணியாற்றும் நர்ஸ்கள் பலர், தென்மாவட்டங்களுக்கு மாறுதல் பெற முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மட்டும், 100க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், தென்மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, நர்ஸ்கள் கூறியதாவது:
இந்த கவுன்சிலிங்கில், 1,300க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலானோர் தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக, மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வந்தவர்கள்.
பல ஆண்டு பணிக்கு பின், சொந்த ஊர்களுக்கு சென்று, 'செட்டில்' ஆக விரும்புகின்றனர். அதன் காரணமாகவே, சென்னையில் பணிபுரியும் நர்ஸ்கள், தென் மாவட்டங்கள் கேட்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரை, 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து கொண்டிருப்பர். குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும், 18,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
அவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க, போதியளவில் நர்ஸ்கள் இல்லை. அதே நிலை தான், சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
எனவே தான், சென்னையில் பணியாற்றும் நர்ஸ்கள், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு சென்றால், சென்னையில் காலி இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, சென்னையில் நர்ஸ் பணியிடங்களை அரசு அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.