அக். 20க்குள் பாம்பன் பாலம் திறப்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
அக். 20க்குள் பாம்பன் பாலம் திறப்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
ADDED : அக் 07, 2024 01:33 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்று சோதனை நடக்கிறது. இந்நிலையில் அக்., 15 அல்லது அக்., 20க்குள் இப்பாலம் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள், 2020 ஆகஸ்டில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. நுாற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் பாலத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2022 டிச., 24 முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பாம்பனில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலம் பணிகள் முற்றிலுமாக நிறைவு பெற்று சில தினங்களுக்கு முன் சோதனைகளும் நடந்தன. ரயில்வே புதிய பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்து இப்பாலம் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது என்ற சான்றளிக்க வேண்டும்.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளன. தற்போது அக்., 15க்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்க ரயில்வே பொறியாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்னக ரயில்வே மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா, நேற்று பாம்பன் பாலப்பணிகளை பார்வையிட்டார். அக்., 15ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா என்பதால் அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்று பாம்பன் பாலத்தை நாட்டு அர்பணிப்பார் என தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி வருகை தந்தால், பாலம் திறப்பதற்கான விழா நடக்கவிருக்கும் மேடை அமைப்பதற்கான இடம், பிரதமர் ெஹலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
எனவே, அக்., 15 அல்லது அக்., 20க்குள் பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

