ரூ.4 லட்சத்திற்கு பதில் 80 லட்சம் அள்ளி கொடுத்த அதிகாரிகள்
ரூ.4 லட்சத்திற்கு பதில் 80 லட்சம் அள்ளி கொடுத்த அதிகாரிகள்
UPDATED : ஜன 04, 2024 06:50 AM
ADDED : ஜன 03, 2024 11:02 PM

விருதுநகர்: திருமங்கலம் -- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிக்காக வத்திராயிருப்பு, நத்தம்பட்டி கிராம புல எண்களில், 57,667 ச.மீ., நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இழப்பீட்டுத் தொகையாக, 3.50 கோடி ரூபாய் வழங்க நில எடுப்பு தாசில்தார் மாரிமுத்து அறிக்கையை சிறப்பு டி.ஆர்.ஓ., அலுவலகத்திற்கு 2022 ஆக., 30ல் அனுப்பினார். இதை உறுதி செய்து டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
இதில் நத்தம்பட்டியில் குறிப்பிட்ட புல எண்ணில் உள்ள கட்டடங்களுக்கு இழப்பீடாக, தலா, 4 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து பொறியாளர் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த நிலத்தின் உரிமையாளர் அருணாச்சலம் மனைவி முனியம்மாளுக்கு, 80 லட்சம் ரூபாய் வழங்கலாம் என நில எடுப்பு தனி தாசில்தார் முன்மொழிந்து, 2022 நவ., 2ல் அனுப்பினார்.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனரால், 2023 ஜன., 12ல் முனியம்மாள் வங்கி கணக்கில், 80 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
நிலத்திற்கான இழப்பீடு அதிகமாக உள்ளதாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, தனி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதில், அதிகமாக பணம் செலுத்தப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, முனியம்மாளிடம் இருந்து கூடுதல் பணத்தை திரும்ப பெற உத்தரவிடப்பட்டது. அது வரை 8.5 சதவீத வட்டி வசூலிக்கவும் நில எடுப்பு சிறப்பு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
மேலும், நிலம் எடுப்பு தாசில்தார்கள் உள்ளிட்ட 10 அலுவலர்கள் மீது, அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயசீலனுக்கு, தற்போதைய நில எடுப்பு தாசில்தார் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார்.