ஆளுங்கட்சியினர் பரிந்துரைத்தவர்களுக்கு பணி: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
ஆளுங்கட்சியினர் பரிந்துரைத்தவர்களுக்கு பணி: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
ADDED : மே 05, 2025 06:55 AM

திருப்பூர் : ஆளும் கட்சி நிர்வாகிகள் பரிந்துரைப்படி ரேஷன், சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலைக்காக காத்திருக்கும் தகுதியுள்ளவர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், கட்சி தலைவரான முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சியினருக்கு எதுவும் செய்து தர முடியவில்லை என்ற ஆதங்கத்தை, மாவட்டச் செயலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
'அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கட்சியினர் மனதில், எதிர்மறை கருத்துகளும் பதிந்து விடக்கூடாது. கட்சியினரை திருப்திப்படுத்தும் வகையில், அரசு தரப்பில் அவர்களுக்கு தேவையானதை செய்து தரப்படும்' என கூட்டத்தில் தெம்பூட்டப்பட்டது.
ரேஷன் கடைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் மாவட்ட செயலர்கள் பரிந்துரைகளை ஏற்று பணி வழங்கவும், உரிய துறை அமைச்சர்கள் தங்கள் துறையில் உள்ள காலியிட விபரங்களை பெற்றுத்தரவும் அறிவுறுத்தப்பட்டது.
காலியிடங்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் உரிய தீர்வு கண்டு கட்சியினருக்கு 'தேவை'யானதை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் அதிர்ச்சி ஏன்?
'பணி நியமனங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகரிக்கும். இது அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு பணி வழங்க விரும்பும் அதிகாரிகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக இது அமையும். அதேசமயம், சில பகுதிகளில் அதிகாரிகளின் திருவிளையாடல்களும் அம்பலமாகும் நிலையும் உள்ளது.
'சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்களில் ஊழியர்கள் நியமிக்க துறை சார்ந்த அதிகாரிகள், 3 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இடம் மற்றும் ஆளுக்கு ஏற்ப பெற்றுக் கொண்டு பணி உத்தரவு வழங்க தயார் நிலையில் உள்ளனர். 'ஆளும் கட்சி நிர்வாகிகள் பரிந்துரைக்கு பணி வழங்க வேண்டும் என்றால், கை நீட்டி வாங்கிய பணத்துக்கு பதில் சொல்ல வேண்டும்.
கட்சியினர் தங்கள் பாட்டுக்கு ஒரு வழியில் வசூல் செய்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்வர். 'இதனால், 'வசூல்' அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். வேலைக்காக அதிகாரி களுக்கு பணம் கொடுத்த அப்பாவிகள் நிலை சற்று பரிதாபமாகத் தான் உள்ளது' என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர்.