சட்ட விரோதமாக குவாரிகளில் கனிம கொள்ளை; உடுமலை அருகே அதிகாரிகள் குழு ஆய்வு
சட்ட விரோதமாக குவாரிகளில் கனிம கொள்ளை; உடுமலை அருகே அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : ஏப் 10, 2025 05:10 AM

உடுமலை : உடுமலை மடத்துக்குளம் பகுதியில், விதி மீறி கனிம கொள்ளையில் ஈடுபட்ட கல் குவாரிகளில் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள குவாரிகளில், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, கிரசர் ஆலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அரைத்து, கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நரசிங்காபுரத்தை சேர்ந்த ஜெகநாதசாமி, மடத்துக்குளம் தாலுகா மைவாடி கிராமத்திலுள்ள கே.எம்.எஸ்., கருப்புச்சாமி குவாரி, உமாதேவி குவாரி மற்றும் அக்சயராஜ் புளூமெட்டல்ஸ் ஆகிய குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் பரப்பளவிலும், அபரிமிதமான ஆழத்திலும் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல், ஜல்லி கிரசர் ஆலையில், தினமும், 40 டன் மட்டுமே அரைத்து, ஜல்லி உற்பத்தி செய்ய அனுமதி பெற்ற நிலையில், பல மடங்கு கூடுதலாக, தினமும், 800 டன் வரை அரைக்கப்படுகிறது, என உரிய ஆவணங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள், தாலுகா அளவிலான கண்காணிப்பு குழு அதிகாரிகள் கள ஆய்வு செய்து, விதி மீறல் குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பவும், அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் அபராதம், வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யன், மாவட்ட துணை புவியியலாளர் வெங்கடேசன் மற்றும் வனத்துறை, போக்குவரத்து துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, சட்ட விரோதமாக கூடுதலாக எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில், அபராதம், உரிமம் ரத்து, வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

