மக்களை ஏமாற்றிய 'பலே' அதிகாரிகள்: குடோன் என கூறி டாஸ்மாக் திறப்பு
மக்களை ஏமாற்றிய 'பலே' அதிகாரிகள்: குடோன் என கூறி டாஸ்மாக் திறப்பு
ADDED : ஏப் 03, 2025 07:24 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை கடை வீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தது டாஸ்மாக் நிர்வாகம். இரு டாஸ்மாக் கடைகளையும், தனியாருக்கு சொந்தமான இடத்தில், வீடு மற்றும் கிடங்கு போன்ற அமைப்பில், பொதுமக்களுக்கு சந்தேகம் வராத வகையில் கட்டடம் கட்டியது.
இரு நாட்களுக்கு முன் இரவில் மின்சாரத்தை துண்டித்து, மதுபாட்டில்களை இறக்கி, நேற்று முன்தினம், திடீரென 12:00 மணிக்கு முன் போர்டை மாட்டி, டாஸ்மாக் கடை திறந்து விற்பனை நடந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் நேற்று முன்தினம் இரவு, நாகை - தஞ்சாவூர் சாலையில், மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து, நேற்று இரு டாஸ்மாக் கடைகள் முன், போலீசார் குவிக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளுக்கு பிரச்னை வராமல், டாஸ்மாக் கடைக்கு செல்ல மாற்று பாதை அமைக்கப்படும் என தெரிவித்ததால், முற்றுகை போராட்டத்தை கை விட்டனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
வேலுார்
அதுபோல, வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ராமாபாய் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியை கடந்து சாத்கர், கள்ளிச்சேரி, கோட்டைச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், ராமாபாய் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடம் தேர்வு செய்து, நேற்று முன்தினம் இரவு, கடையில் மது பாட்டில்களை இறக்கினர். நேற்று, இது குறித்த தகவல், அப்பகுதி மக்களுக்கு பரவியதும், ஆத்திரமடைந்த அவர்கள், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடை முன் தர்ணா செய்தனர்.
பேரணாம்பட்டு போலீசார் பேச்சு நடத்தியும், அவர்கள் ஏற்கவில்லை. கடையை அகற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக, அப்பகுதி மக்கள் அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

