ADDED : மே 28, 2024 05:29 AM

லோக்சபா தேர்தலில், ஒரு கோடியே, 20 லட்சம் ஓட்டுகள் பெற்றால் தன் கை ஓங்கி விடும் என்றும், கட்சியில் களையெடுப்பு நடவடிக்கைகளை துவங்கி விடலாம் என்றும், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கருதுகிறார்.
அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 33 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 4.34 கோடி ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதில், 40 சதவீதத்திற்கு மேல் பெறும் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு அடுத்த நிலையில் வர வேண்டுமானால், 25 முதல் 30 சதவீத ஓட்டுகள் பெற வேண்டும். ஒட்டுமொத்த அணிக்கான ஓட்டாக இல்லாமல், அ.தி.மு.க.,வின் தனிப்பட்ட ஓட்டுகளாக, 28 சதவீதம் பெற வேண்டும் என, இ.பி.எஸ்., விரும்புகிறார். அந்தளவுக்கு ஓட்டுகள் பெற்று, கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தால் போதும்; கட்சியில் களையெடுப்பை துவங்கி விடலாம் என, அவர் திட்டமிடுகிறார். அதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் செயல்படாத மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும் தான்.
தேர்தலுக்காக பணம் கொடுத்தால், அது கடைசி வரை சென்று சேருவதில்லை. கிடைத்த பணத்தை பல நிர்வாகிகள் அமுக்கி விட்டனர். ராமநாதபுரம், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மத்திய சென்னை, வட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. இது தொடர்பாக தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன.
தி.மு.க., வேட்பாளர்களிடம், எங்கள் மாவட்ட செயலர்கள் சிலர் ரகசிய, 'டீலிங்' நடத்திய புகார்களும் வந்துள்ளன. இதுபோன்ற துரோக செயலை கண்டு பழனிசாமி கோபத்தில் உள்ளார். ஒருவேளை அ.தி.மு.க.,வுக்கு ஒரு கோடிக்கு மேலாக ஓட்டுகள் கிடைத்து விட்டால், 12 மாவட்ட செயலர்கள் வரை மாற்றப்படலாம். ஓட்டு வங்கி குறைந்து விட்டால், களையெடுப்பு நடவடிக்கையில் வேகம் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -