'ஒரே நாடு; ஒரே தேர்தல்' 2029ல் அமலாகும்! பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததாக கூட்டுக்குழு தகவல்
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' 2029ல் அமலாகும்! பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததாக கூட்டுக்குழு தகவல்
ADDED : ஆக 25, 2026 05:10 AM

- நமது டில்லி நிருபர் -
''ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் பலமுறை கலந்தாலோசித்து விட்டோம். அவர்களில், 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
''மீதமுள்ளவர்களும் அரசியல் ரீதியாக விருப்பம் இருந்து உறுதியான முடிவு எடுத்தால், இந்த நடைமுறையை, 2029-லேயே அமல்படுத்தலாம்,'' என, அத்திட்டத்தை ஆய்வு செய்யும் பார்லி., கூட்டுக்குழுவின் தலைவரும், பா.ஜ., - லோக்சபா எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி தெரிவித்து உள்ளார்.
உயர்மட்டக்குழு
லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்கள், ஒரே நேரத்தில் நடத்தப்படும் முறை ஏற்கனவே அமலில் இருந்தது. 1952-ல் நடந்த முதல் லோக்சபா தேர்தல், மாநில சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்தே நடத்தப்பட்டன.
கடந்த 1967லும், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பின், மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதால், இந்த சுழற்சி சீர்குலைந்தது.
இந்த சூழலில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசித்த இக்குழு, அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
கடந்த 2024 டிசம்பரில் நடந்த குளிர் கால கூட்டத்தொடரில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவதற்கான, அரசியலமைப்பு 129வது சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால், மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, இந்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ., லோக்சபா எம்.பி., பி.பி.சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு சட்ட நிபுணர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என, பல தரப்பினரிடம் ஆலோசனை நடத்தியது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்யும் பார்லி., கூட்டுக்குழுவின் கூட்டம், அதன் தலைவர் பி.பி.சவுத்ரி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில், காங்., - எம்.பி.,க்கள் சிதம்பரம், பிரியங்கா, திரிணமுல் காங்., - எம்.பி., சாகரிகா கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில அரசுகளின் செயல்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, இந்த யோசனையை கைவிட வேண்டும்' என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக, காங்., மூத்த தலைவர் சிதம்பரம், ''தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகளின் நிலையான பதவிக்காலத்தை மாற்றுவது, அரசியலமைப்புக்கு எதிரானது. இதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது,'' என்றார்.
அதே போல, திரிணமுல் எம்.பி., சாகரிகா கோஷும், இந்த முறையை எதிர்த்ததோடு, தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
99 சதவீதம் பேர்
கூட்டம் முடிந்ததும், பி.பி.சவுத்ரி கூறுகையில், ''ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் பலமுறை ஆலோசனை நடத்தி விட்டோம். அவர்களில், 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
''கூட்டுக்குழுவில் உள்ள எம்.பி.,க்களில் பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தால், இத்திட் டத்தை, 2029லேயே அமல் படுத்தலாம்,'' என்றார்.
இந்த விவகாரத்தில், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களின் சம்மதம் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது. கூட்டுக்குழுவிலும் பெரும்பாலான எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், 2029லேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி விட்டது என்றே கூறப்படுகிறது.
