உங்களில் ஒருவன்: கிருபானந்த வாரியாரையும் விட்டு வைக்காத தி.மு.க.,!
உங்களில் ஒருவன்: கிருபானந்த வாரியாரையும் விட்டு வைக்காத தி.மு.க.,!
ADDED : பிப் 05, 2024 02:08 AM

சோழ மாமன்னர்களின் ஆளுகை தொடங்கிய பின், தமிழக வரலாற்றை நிர்ணயித்த மாநகரம் வேலூர். மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் ஒருசேர அருள் வழங்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் இருக்கும் வீரம் செறிந்த மண்ணான வேலூரிலும்; ரயில்கள் வாயிலாக வேலுாரை தொடர்பு கொள்ளச் செய்யும் ரயில் சந்திப்பும், புகழ்பெற்ற காங்கேயநல்லுார் முருகன் கோவில் அமைந்திருக்கும் காட்பாடியிலும்; கெங்கையம்மன் குடி கொண்டிருக்கும் கீழ் வைத்தினான்குப்பம் தொகுதியிலும், பா.ஜ., பாதயாத்திரை சிறப்பாக நடந்தது.
பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு இலக்கணமாக சொல்லப்படுபவற்றில், முத்தலாக் தடைச் சட்டம் முக்கியமானது. அது, இஸ்லாமிய பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை, பாதயாத்திரைக்கு, அம்மக்கள் கொடுத்த வரவேற்பு வாயிலாக காண முடிந்தது.
பிரதமர் மோடி தலைமையில், 2014ல் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்தது. ஆனால், 800 நாட்களிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. சொன்னதையெல்லாம், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே செய்து முடிக்கும் அரசு தான் பிரதமர் மோடி அரசு.
குறிப்பாக, வேலுார் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, 2,637 கோடி ரூபாயை,மத்திய அரசு செலவிட்டுள்ளது.
* வேலுார் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, மத்திய அரசு 980 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வேலுார் கோட்டையை புதுப்பித்தல், புதிய பஸ் நிலையம், பூங்கா என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன
* உதான் திட்டத்தின் கீழ், 65 கோடி ரூபாய் செலவில், வேலுார் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்துள்ளன; விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
மக்கள் வரிப்பணம்
வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் வேலுார் மாவட்டத்தில், மத்திய அரசால் செலவிடப்பட்டு, பல லட்சம் பேருக்கு பயன் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், 365 கோடி மதிப்பில், காட்பாடி ரயில் சந்திப்பு மறுசீரமைப்பு திட்டம் பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் முடித்ததும், காட்பாடி ரயில் நிலையம் என்றே அழைக்கப்படும்.
மக்கள் வரிப் பணத்தில் திட்டங்களை நிறைவேற்றி, அதற்கு கருனாநிதி பெயர் சூட்ட மாட்டோம். முருகபக்தரும், ஆன்மீகவியலாளருமான கிருபானந்த வாரியார், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காங்கேயநல்லுாரில் பிறந்தவர். எட்டு வயதிலேயே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் கற்றுத் தேர்ந்தவர்.
சனாதன தர்மம் தமிழகத்தில் செழிக்கிறது என்றால், அதற்கு கிருபானந்த வாரியாரும் காரணம். ஆனால் அந்த மகான் வீட்டை, அண்ணாதுரை மறைவுக்குப் பின், அவரைத் தவறாகப் பேசிவிட்டார் என்று தி.மு.க.,வினர் தாக்கினர்; அவர் வழிபட்ட சாமி விக்கிரகங்களையும் உடைத்தனர். இப்படித்தான் காலம் காலமாக தி.மு.க.,வினர் செயல்பட்டு வருகின்றனர்.
மணல் கொள்ளை சிக்கல்
தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், மணல் கொள்ளை வாயிலாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, 4,730 கோடி ரூபாய். வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான் இதற்கு காரணம். மணல் கொள்ளை முன்னின்று செய்தவர்களுடைய, 136 கோடி ரூபாய் சொத்தை, அமலாக்கத்துறை இரு நாட்களுக்கு முன் முடக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனும் சிக்குவார்.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் பெயர் டி.துரைமுருகன். ஆனால், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் தந்தை பெயர் துரைமுருகன். அதனால் இருவரும் வேறு வேறு' என்று வாதிட்டார். இப்படி ஏமாற்றுகிறவர்கள் தான் தி.மு.க.,வினர்.
நிதி எங்கே?
கொங்கு பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த, 65 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, 98 சதவீத பணிகளை முடித்து விட்டது. மீதமுள்ள 2 சதவீத பணிகளை, மூன்று ஆண்டுகளாக தி.மு.க., அரசு முடிக்கவில்லை. இதற்காக ஒதுக்கீடு செய்த நிதி எங்கே என விவசாயிகள் கேட்கின்றனர்; பதில் இல்லை.
இப்படி தமிழகம் முழுதும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, விரைந்து முடிக்க வேண்டிய திட்டங்களை முடிப்பதில்லை. அதெல்லாம் நிறைவடைந்து, மக்கள் நிம்மதி அடைய வேண்டும் என்றால், தி.மு.க., ஆட்சி நிறைவுக்கு வர வேண்டும்.
பயணம் தொடரும்...

