உங்களில் ஒருவன்: இஸ்லாமிய நாடுகளின் தோழனாக பிரதமர் மோடி!
உங்களில் ஒருவன்: இஸ்லாமிய நாடுகளின் தோழனாக பிரதமர் மோடி!
ADDED : பிப் 04, 2024 04:06 AM

பிரம்ம தேவன் தன் தோஷம் நீங்க வழிபட்ட நாகநாதசுவாமி கோவில் அமைந்திருக்கும் ஆம்பூர்; வாணி தேவியான அன்னை சரஸ்வதி தேவி சாபவிமோசனம் பெற்று பாடியதுமான, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி; வாழையடி வாழையாக வாழைச் சாகுபடிக்குப் பெயர் பெற்ற குடியாத்தம் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிகளிலும், பெரும் திரளாக கூடி ஆதரவளித்த பொதுமக்கள் ஆரவாரத்துடன், வெகுசிறப்பாக பா.ஜ., பாதயாத்திரை பயணம் நடந்தேறியது.
ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்று கரையில் விவசாயம் செய்வோர் அனைவரையும், விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதில்தான் ஆளும் அரசு குறியாக இருக்கிறது. போதிய சுத்திகரிப்பு அலைகள் அமைக்கவும், அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், திராவிட மாடல் அரசு தவறிவிட்டது.
பிரதமர் மோடி, நல்லாட்சியாலும், வெளியுறவுக் கொள்கைகளாலும், வளர்ச்சியாலும் உலக நாடுகளின், 14 உயரிய விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டவர். அவற்றில், ஆறு விருதுகளை இஸ்லாமிய நாடுகள் வழங்கிஉள்ளன.
அதுமட்டுமல்ல, அபுதாபி அரசர், எகிப்து நாட்டுத் தலைவர், இஸ்லாமிய உலக லீக்கின் தலைவர் என, முக்கியமான இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடியை நெருங்கிய நண்பராக குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரானவராக கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.
சலுகைகள்
கடந்த 2014க்கு முன்வரை, காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மத்திய அரசு பணிகளில், 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது, 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்தவர்களில், 36 சதவீதம் சிறுபான்மையினர்
பிரதமரின் விவசாய கவுரவ நிதி திட்டத்தில் 33 சதவீதம்; பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீதம் சிறுபான்மையினர் பயன்பெற்றுள்ளனர்
இஸ்லாமிய பெண் குழந்தைகள் பட்ட படிப்பை ஊக்குவிக்க, அவர்கள் படித்து முடித்தவுடன், 51,000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தி.மு.க., தொடர்ந்து மக்களை, மதத்தால் பிரித்து வெறுப்புணர்வைத் துாண்டி அரசியல் செய்கிறது.
முக்கியமான இஸ்லாமிய நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள, சிறுபான்மை சகோதரிகளுக்கு எதிரான 'முத்தலாக்' முறையை இந்தியாவிலும் நீக்கியவர் பிரதமர் மோடிதான்.
அன்று, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்த பிரிவினையை, இன்று தி.மு.க., - காங்., போன்ற கட்சிகள் செய்து வருகின்றன. ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்ப்பதைத் தவிர, சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்காக, எந்தத் திட்டங்களையும் தி.மு.க., செயல்படுத்தவில்லை.
கிராம சாலைகள் இல்லை
கிராம சாலை திட்டத்திற்காக, மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை 5,886 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
ஆனாலும், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும், இந்த தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலை என்ற மலை கிராமம் உட்பட, பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், 100 சதவீத சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது.
இந்தப் பகுதியில் ஓடும் பாலாற்றில் கழிவுகள் கலப்பதாக, பலமுறை விவசாயிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டியும், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.
தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதால், மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தரைப்பாலம் அமைக்க, மத்திய அரசு 67 கோடி ரூபாய் ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பாலம் அமைக்கப்படவில்லை. பாலத்தை விரைந்த கட்ட வைக்கும் முயற்சியில் பா.ஜ., களமிறங்கி உள்ளது.
சுவடே இருக்காது
குடியாத்தம் தொகுதியில், முன்னாள் முதல்வர் காமராஜர், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின், கவுண்டினிய நதியின் குறுக்கே பாலம் அமைத்தார். அந்த பாலம், 70 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
தி.மு.க., ஆட்சியில் கட்டியிருந்தால், பாலம் இருந்த சுவடே தெரியாமல் போயிருக்கும். ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர் உதாரணம்.
அன்னிய முதலீட்டாளர்கள் தமிழகத்தைவிட, பிற மாநிலங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், தமிழகத்தில் நிலவும் கமிஷன், ஊழல் நிலவரம்.
வேலையில்லா இளைஞர்களுக்கு, மூன்றரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., 10,000 பேருக்கு மட்டுமே அரசு பணி வழங்கி உள்ளது. காவல் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் ஆள் பற்றாக்குறை உள்ளது.
வரும் லோக்சபா தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கப் போகும் தேர்தல். அதனால், ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
-பயணம் தொடரும்...