உங்களில் ஒருவன்: எப்போதும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதே சனாதன தர்மம்
உங்களில் ஒருவன்: எப்போதும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதே சனாதன தர்மம்
ADDED : ஜன 26, 2024 05:54 AM

சிறு குழந்தையாக இருந்த திருஞானசம்பந்தருக்கு, அன்னை பார்வதி தேவி ஞானப்பால் ஊட்டி, சனாதன தர்மத்தைச் தழைக்கச் செய்த சீர்காழி மண்ணிலும்; பொன்னியின் செல்வன் கதைக்கான கரு உருவான அனந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள காட்டுமன்னார்கோவிலிலும்; திட்டங்கள் ஏதும் கிடைக்காது திண்டாடிக் கொண்டிருக்கும் திட்டக்குடி மண்ணிலும், சுட்டெரிக்கும் சூரியனை பொருட்படுத்தாது, தாமரையின் குளுமை நாடிக் கூடிய மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். அன்பு மிகுந்த மக்களின் ஆரவாரத்தால் பாதயாத்திரை சிறப்புற்றது.
வெள்ளையனை விரட்டியடிக்க, இயக்கத்தை ஆரம்பித்து, பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தேச பக்தியை ஊட்டியவர், சீர்காழியை சேர்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி. அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, வறுமையில் வாடியபோது, 'தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என முழங்கினார் பாரதி. இன்று பிரதமர் மோடி கொண்டு வந்த போஷன் திட்டத்தின் வாயிலாக, பள்ளி குழந்தைகளுக்கு காலை மற்றும் மத்திய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்திற்காக, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்திற்கு 1,146 கோடி ரூபாய் வழங்கியுள்ளது மத்திய அரசு. ஆனால், தி.மு.க., மாநாட்டில் காலை உணவு திட்டத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்குத் தான் தி.மு.க., நன்றி சொல்ல வேண்டும்.
இதுதான் சனாதன தர்மம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில், 2023 ஏப்ரல் 16ல், கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது, 23 ஐம்பொன் சிலைகள், 410 முழுமையான தேவார பதிகங்கள் கொண்ட செப்பேடுகள் கிடைத்தன. எட்டு மாதங்களுக்குப் பின், தமிழக தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது.
இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணம். இதுதான் இவர்கள் நம் கலாசாரத்தை காப்பாற்ற காட்டும் அக்கறை. காட்டுமன்னார் கோவில் பகுதியை ஆண்டு வந்த நவாப், தீராத வியாதியில் துன்பப்பட்டபோது, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோவில் தீர்த்தம், துளசி பிரசாதம் உட்கொண்டு பூரண குணமடைந்தார். அதனால், அவர் கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை கட்டி, அங்கு பெருமாளுக்கு உற்சவம் நடைபெற ஏராளமான நிலங்களை எழுதி வைத்தார்.
இன்றும் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில், மாசி மாத பிரம்மோற்சவத்தில், நவாப் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதி எதிரில் சுவாமியை நிறுத்தி, மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து, கற்பூர தீபாராதனை செய்கின்றனர். பின்னர், சுவாமிக்கு கோவில் சார்பாக காட்டப்பட்ட கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகின்றனர். இதுதான் சனாதன தர்மம். இந்த மாதிரியான மத நல்லிணக்கத்தைத் தான் எப்போதும் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது.
எப்படி துதிபாடுவது?
தி.மு.க.,வின் ஊழல் வரலாறு துவங்கியதே, இங்குள்ள வீராணம் ஏரி திட்டத்தில்தான். 1970-களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தீட்டப்பட்டது. மறைந்த முரசொலி மாறனுக்கு நெருங்கிய நண்பரான சத்யநாராயணா நிறுவனத்துக்கு முறைகேடாக, 'டெண்டர்' வழங்கப்பட்டது. மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்.
இதற்காக, அந்தக் காலத்திலேயே 29 லட்சம் ரூபாயை, 7 தவணையாக கருணாநிதி வாங்கியதாக, சத்தியநாராயணா நிறுவனத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், சர்க்காரியா கமிஷனில் கூறியுள்ளார். அந்த 29 லட்சம் என்பது தற்போதைய மதிப்பில், 160 கோடி ரூபாய்க்கு சமம். காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.,வான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைசெல்வனின் ஒரே சிந்தனை, எப்படி முதல்வர் ஸ்டாலினை துதிபாடுவது என்பது மட்டும்தான்.
கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியில், முதல்வர் ஆகியிருக்கும் ஸ்டாலினை, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுகிறார். அம்பேத்கர் அமைச்சராக இருந்தபோது, அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் இன்னும் போய் சேரவில்லையே என வருந்தினார். அவருடைய கனவை மோடிஜிதான், தற்போது 'ஜல்சக்தி' திட்டம் வாயிலாக நிறைவேற்றுகிறார்.
கவனமில்லை
தமிழக பா.ஜ., கோவில்களை ஆன்மிகமாக மட்டும் பார்க்கவில்லை. அந்தந்த பகுதிகளின் வளர்ச்சியாகவும் பார்க்கிறோம். ஒவ்வொரு கோவிலில் இருந்து வரும் வருமானமே, அந்தப் பகுதிகளை மேம்படுத்தப் போதுமானது. ஆனால், அந்த வருமானத்தை தி.மு.க., முறைகேடாகப் பயன்படுத்துகிறது. கோவில்களையும் பராமரிப்பதில்லை; அந்தப் பகுதி வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவதில்லை.
வரும் லோக்சபா தேர்தல் நேர்மையாளர்களுக்கும், கொள்ளை அடிப்பவர்களுக்குமான தேர்தல். கொள்ளையர்கள் வீழ்த்தப்பட, பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க தயாராகி விட்டனர்.
பயணம் தொடரும்...

