இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'
இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'
ADDED : ஜன 28, 2026 05:03 AM

தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலக்கத்தில், 'சீட்' கேட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதில் எண்ணிக்கையை குறைத்தால், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
வி.சி.,யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, அ.தி.மு.க., - த.வெ.க., போன்ற கட்சிகள் முயன்றன. ஆனால், சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்வதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
அதேநேரம், 'கூட்டணியில் தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,தான் அனைத்து தொகுதிகளிலும் பெரிய கட்சியாக இருக்கிறது. எனவே, தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,க்கு தான் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். குறிப்பாக, இரட்டை இலக்கத்தில் ஒதுக்க வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த முறை போலவே, இம்முறையும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கினால், கூடுதலாக ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வி.சி., கட்சியினர் கூறியதாவது: சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., விரும்புகிறது. அக்கட்சிகளுக்கும் சீட் ஒதுக்குவதோடு, தி.மு.க.,வும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.
நாங்கள் கூடுதல் இடங்கள் ஒதுக்கும்படி கேட்டு வருகிறோம். ஒருவேளை, இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்காவிட்டால், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

