ADDED : ஜூலை 07, 2024 02:50 AM

மஹாராஷ்டிராவில், தற்போது பா.ஜ., -அதிருப்தி சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவிலிருந்து வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டே, தற்போது முதல்வராக உள்ளார். சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க உதவியவர் ஷிண்டே. 'இவருடைய சிவசேனா தான் ஒரிஜினல் சிவசேனா' என, தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைக்க, பா.ஜ., உதவியது. 'பின்னாளில் ஏக்நாத் ஷிண்டே தன் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார்' என, பா.ஜ., நம்பியது; ஆனால், அது நடக்கவில்லை. இன்னொரு பக்கம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசையும் உடைத்தது பா.ஜ., அதிருப்தியாளரான அஜித் பவாரை கூட்டணியில் சேர்த்து, அவருக்கு துணை முதல்வர் பதவியையும் அளித்தது பா.ஜ., 'அஜித் பவாரின் கட்சி தான், உண்மையான தேசியவாத காங்கிரஸ்' என, தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து விட்டது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் பா.ஜ., எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நிலை மோசமாகி உள்ளது.
முன்னாள் முதல்வரான இவர், மீண்டும் முதல்வராகும் ஆசையில் இருந்தார்; ஆனால், அது நடக்காது போலிருக்கிறது. அஜித் பவாரின் கட்சியும் தோல்வியைச் சந்தித்தது.
இதைப் பயன்படுத்திக் கொண்டார் ஷிண்டே. மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அறிவித்தார்; இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், இப்போது ஷிண்டேவின் கை ஓங்கியுள்ளது. உலக, 'டி20' கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வென்ற இந்திய அணியை, சட்டசபைக்கு அழைத்து பாராட்டினார். இது தொடர்பான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்களின் படங்களை விட, ஷிண்டேவின் படம் தான் மிகப் பெரிதாக இருந்தது.
இந்த ஆண்டு அக்டோபருக்கு முன்னதாக, மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 'ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., கூட்டணி தேர்தலை சந்திக்கும்' என, பா.ஜ., தலைமை அறிவித்துள்ளது.
'மராட்டியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் விவகாரம் பெரும் பிரச்னையாக உள்ளது; மராட்டியர் ஒருவர் தான் முதல்வர் பதவியில் இருக்க வேண்டும்' என, சரத் பவார் உட்பட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனவே, ஷிண்டேவை விட்டால் வேறு வழியில்லை என்பதால், பா.ஜ., இந்த முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.