ADDED : மார் 08, 2024 04:48 AM

வருமான வரிப்படிவம் தாக்கல் செய்துள்ள பலரும், வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை வரி விலக்காகக் கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் கூடுதல் வருமான வரி ஆணையர் (நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அதிகமான வருமான வரி திரும்பக்கோரும் (ரீபண்ட்) கோரிக்கைகள், வருமான வரித்துறையால் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, வரி செலுத்துவோர் சிலர், வழக்கத்துக்கு மாறாக, வருமான வரிச்சட்டப்பிரிவு 80 G-யின் படி (நிதிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை) பிரிவு 80 E-யின் படி (கல்விக்கடனுக்கான வட்டி) மற்றும் பிரிவு 80 GGC-யின் படி (அரசியல்கட்சிகளுக்கு அன்பளிப்பு) பெரும் வரி விலக்குகளை, 2021-22, 2022-23 மற்றும் 2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிப்படிவத்தில் கோரியுள்ளனர்.
வரி செலுத்துவோர் சிலர், தங்களுடைய மொத்த வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை, வரி விலக்காகக் கோரியுள்ளது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, பலராலும் தங்களுடைய வருமான வரிப்படிவத்தில், அவர்கள் கோரிய வரிச் சலுகைகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை வழங்கமுடியவில்லை.
இத்தகைய சூழலில், கடந்த 2022 ஏப்.,1 லிருந்து வருமான வரிச்சட்டப்பிரிவு 139( 8ஏ)ன்கீழ், வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப்படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்தபின்னரும், கூடுதல் வரியைச் செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின்கீழ், வரி செலுத்துவோர், அந்த வருடத்துக்குத் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானம் அல்லது பிழைகளைச் சரி செய்ய முடியும். வருமான வரிப்படிவத்தைத் தாக்கல் செய்யும்போது, பிழைகள் செய்திருந்தால், அதைச் சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்து, பிழைகளை திருத்தம் செய்து கொள்ளலாம்.
மதிப்பீட்டு ஆண்டு 2021-2022 க்கான (அதாவது நிதியாண்டு 2020-2021) புதுப்பிக்கப்பட்ட வரு மான வரிப்படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, வரும் மார்ச் 31 ஆகும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-

