தொகுதி பங்கீட்டில் எதிர்க்கட்சிகள்... வேகம்! பீஹாரில் இறுதியானது எண்ணிக்கை
தொகுதி பங்கீட்டில் எதிர்க்கட்சிகள்... வேகம்! பீஹாரில் இறுதியானது எண்ணிக்கை
ADDED : ஜன 07, 2024 12:08 AM

புதுடில் லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சை, காங்கிரஸ் துவங்கவுள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணியின் முதல் தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்த மாநிலம் என்ற பெருமையை பீஹார் பெறவுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த, 28 கட்சிகள் அமைத்துள்ள 'இண்டியா' கூட்டணியின் தொகுதிப்பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு தேசிய அரசியல் வட்டாரங்களில் மிக முக்கிய பேசுபொருளாகி வருகிறது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில், ஒவ்வொரு கட்சிகளும் ஏற்கனவே பேச்சை துவக்கிவிட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் என, தலைமையால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிர்வாகிகளை வைத்து, இந்த திரைமறைவு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மாநில வாரியாக பேச்சு
அந்த வகையில், தமிழகத்தில் காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று, தி.மு.க., - எம்.பி., பாலு சந்தித்து பேசிய சம்பவம் நடந்தது.
இதேபாணியில், தலைமையின் ஒப்புதலோடு ஒவ்வொரு மாநிலத்திலும் உத்தேச தகவல்களுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுகள் அரங்கேறி வருகின்றன.
இதன் விளைவாக, பீஹாரில் நான்கு கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டின் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்து விட்டன. அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியது மட்டுமே பாக்கி.
மொத்தமுள்ள 40 இடங்களில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 23 இடங்களை எடுத்துக் கொண்டு, முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 17 தொகுதிகளை தந்துள்ளது.
தன் பங்கிலிருந்து ஐந்து தொகுதிகளை காங்.,கிற்கும், ஒரு இடத்தை இடதுசாரி கட்சிகளுக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தந்துள்ளது.
இதன்படி பெரிய கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும், தலா 17 இடங்கள் என சம அந்தஸ்துடன் தொகுதிகளை பங்கிட்டு போட்டியிட தீர்மானித்து உள்ளன.
காங்., அமைத்துள்ள கூட்டணி வழிகாட்டுதல் குழுவின் தலைவர் முகுல் வாஸ்னிக்குடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர்கள் நேற்று முன்தினம் புதுடில்லியில் நடத்திய பேச்சில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எண்ணிக்கை முடிவாகிவிட்டது. அவற்றில் எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு, வேட்பாளர்கள் யார் யார் என்ற பேச்சு தான், இப்போது நடந்து வருகிறது.
இது குறித்த சிக்கல்களுக்கும் அடுத்த சில நாட்களில் தீர்வு காணப்படும் என்பதால், இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பீஹாருக்கு கிடைக்கும்.
இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை.
மாறாக, இந்த மாத கடைசியில், இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்படஉள்ளது.
அதில் தலைவர்கள் பங்கேற்று, முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.
இந்நிலையில், பீஹாருக்கு அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியுடனான பேச்சை அதிகாரப்பூர்வமாகவே இன்று புதுடில்லியில், காங்., வழிகாட்டுதல் குழு துவங்கவுள்ளது.
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ள புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதால், தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கலாம் என ஆம் ஆத்மியும் விரும்புகிறது.
சிக்கல் நீடிப்பு
புதுடில்லியின் ஏழு தொகுதிகளில், ஒன்றில் கூட இரண்டு கட்சிகளுக்குமே எம்.பி.,க்கள் இல்லை. அதே நேரத்தில், ஆட்சியில் ஆம் ஆத்மி உள்ளது. இதை அடிப்படையாக வைத்து, ஆம் ஆத்மி நான்கு, காங்., மூன்று என்ற முடிவாகலாம் என தெரிகிறது.
இதுவரை நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகளில், மேற்கு வங்கம், பஞ்சாப், உ.பி., ஆகிய மாநிலங்கள் தான் பெரிய இழுபறியாகவும், மஹாராஷ்டிராவில் கடைசி நேர சிக்கல் நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் -