ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி.,; செல்வப்பெருந்தகை ஆசைக்கு எதிர்ப்பு
ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி.,; செல்வப்பெருந்தகை ஆசைக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 01, 2025 03:50 AM

சென்னை : 'ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி., கட்சிகள் இருப்பது நல்லது' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, வி.சி., மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைக்க, தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் வி.சி., தலைவர் திருமாவளவன், அவ்வப்போது அரசை விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில் வி.சி., இருக்காது என திருமாவளவன் திரும்ப திரும்பக் கூறி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தார். அன்புமணி, ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், நடந்த இந்த சந்திப்பையடுத்து, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை, தி.மு.க., பக்கம் இழுக்கவே, இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் பரவி வருகிறது.
சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, 'பா.ம.க., - வி.சி., கட்சிகள் ஒரே கூட்டணியில் இருப்பது தான் நல்லது; 2011 தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தன' என்றார்.
செல்வப்பெருந்தகையின் கருத்து, வி.சி., கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதை, அவர்கள் விரும்பவில்லை.
அவ்வாறு நடந்தால், வி.சி., ஓட்டு வங்கி முழுதும் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. எனவே, செல்வப்பெருந்தகைக்கு வி.சி., தரப்பு கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
வி.சி., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'தி.மு.க., - பா.ஜ., கட்சிகள், 2001 தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்தன. வரும் 2026 தேர்தலிலும், அதுபோல மீண்டும் கூட்டணி அமைக்கலாமா; அப்படி அமைத்தால், காங்கிரஸ் எந்த கூட்டணியில் இருக்கும்' என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், 'செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை' என்ற பெயரில், அவர் இதுவரை இருந்த கட்சிகளின் பெயர்களை பட்டியலிட்டு அவரது புகைப்படத்துடன் கிண்டலடித்து வருகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி.,யை வெளியேற்றிவிட்டு, பா.ம.க.,வை கொண்டு வரும் வேலையை, செல்வப்பெருந்தகை துவக்கி உள்ளதாக கூறப்படுவதால், தி.மு.க., தலைமை தலையிட வேண்டும் என வி.சி., தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.