திறமையற்ற ஊழியர்களை அடையாளம் காண உத்தரவு!: அறிக்கை தரும்படி மத்திய அரசு வலியுறுத்தல்
திறமையற்ற ஊழியர்களை அடையாளம் காண உத்தரவு!: அறிக்கை தரும்படி மத்திய அரசு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 12:09 AM

புதுடில்லி: பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் திறமையற்றவர்களை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்கும்படி, பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையை நிர்வகிக்கும் அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்திய அரசு இயந்திரங்கள் முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும் என சமீபத்தில் வலியுறுத்தியது.
வருகை பதிவு
இது தொடர்பாக பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9:15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்.
'உயரதிகாரிகள் உட்பட அனைவரும் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவியில் கட்டாயம் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வராவிட்டால், அரை நாள் தற்செயல் விடுப்பு எடுத்ததாக கருதப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த நடவடிக்கையாக பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் பணித்திறன் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் திறனை சோதிக்க வேண்டியது அவசியமாகிறது.
மக்களுக்கு நல்ல முறையில் சேவை அளிக்கும் வகையில், ஊழியர்களை வேலையில் தக்கவைக்க வேண்டுமா அல்லது பணியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு அளிக்க வேண்டுமா என்பதை கண்டறிய வேண்டியது முக்கியம்.
இதற்காக, அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை பல முறை வலியுறுத்தி உள்ளது.
ஆனால், இதை எந்த அமைச்சகமும் முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால், திறமையற்ற ஊழியர்களை அடையாளம் காண்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, இதற்காக அமைக்கப்பட்ட மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை மறுஆய்வுக் குழுவிடம், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
நடவடிக்கை
சந்தேகத்துக்குரியவர்கள் அல்லது முறைகேடுகளில் ஈடு படுபவர்களாக கருதப்படும் ஊழியர்கள், அரசுப் பணிகளில் தொடர தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர். பணியில் திறமையற்றவர்களாக கருதப்படுவோருக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்படும்.
அனைத்து மட்டங்களிலும் பொறுப்பான மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்குவதன் வாயிலாக, நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.