கனிமொழிக்கு தெரியாமல் கட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு; உதயநிதி கூட்டத்துக்கு போகாமல் தவிர்த்தாரா?
கனிமொழிக்கு தெரியாமல் கட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு; உதயநிதி கூட்டத்துக்கு போகாமல் தவிர்த்தாரா?
ADDED : நவ 15, 2024 04:26 AM

துாத்துக்குடி: தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று துாத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தி.மு.க., சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்த அவர், தேர்தல் பணியை துவக்கி வேகமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட வேண்டும் என வரும் அவர் நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, துாத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு மனு அளிக்க வந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 7,893 பேருக்கு 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் மாவட்டத்தில் நடந்து வரும் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் நடந்த பணிகளின் நிலை குறித்தும், முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையாதது குறித்து, அவர் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டார். பகல் 12:00 மணியளவில் துவங்கிய கூட்டம், மதியம் 2.30 மணி வரை நடந்தது.
துாத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ,க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், துாத்துக்குடி லோக்சபா எம்.பி.,யான கனிமொழி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் ஆப்சென்ட் ஆனதால், உதயநிதி 'அப்செட்' ஆனதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். இதனால், தி.மு.க., சார்பில் பவள விழாவை முன்னிட்டு நடக்க இருந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.
உதயநிதி வருகை குறித்து முறையான தகவல் இல்லாதது மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முறையான அழைப்பு இல்லாதது போன்றவற்றால் கனிமொழி திடுமென புறப்பட்டு வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உதயநிதி கூறியதாவது:
துாத்துக்குடி வரும்போது கனிமொழியிடம் தகவல் தெரிவித்து விட்டுதான் வந்தேன். அவசர வேலையாக அவர் வெளிநாடு சென்றுள்ளார். 15 நாட்களில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார்.
அவர் தமிழகம் திரும்பியதும், அவருடன் இணைந்து மீண்டும் இங்கு வருவேன். அப்போது, இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்போம். உள்ளாட்சி தேர்தல் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. முதல்வர்தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.