UPDATED : ஜூன் 18, 2023 01:16 PM
ADDED : ஜூன் 18, 2023 04:42 AM
இமயமலை தொடரில் உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது கிரவுஞ்ச மலை. மொத்தம், 12 ஆயிரம் அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருக்கிறது கார்த்திகேய சுவாமி கோவில். இந்த கார்த்திகேய சுவாமி வேறு யாரும் இல்லை; தமிழகத்தில் அறுபடை வீடு கொண்ட நம்ம முருகப் பெருமான்தான்.
திருவிளையாடல் புராணம் நாம் அறிந்தது தான். கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் தங்கள் குழந்தைகளான முருகனுக்கும், விநாயகருக்கும் போட்டி வைத்தனர். இந்த உலகை ஏழு முறை யார் சுற்றி முதலில் வருகின்றனரோ அவர்களுக்கு அரிய பரிசு என்பது தான் அந்த போட்டி.
முருகப்பெருமான் உடனே தன் வாகனமாக மயில் மீது ஏறி, உலகை ஏழு முறை சுற்றி வருகிறார். அதற்குள், விநாயகர் தன் மதிநுட்பத்தை பயன்படுத்துகிறார். 'தாய், தந்தை தானே உலகம். அப்படியானால், தாய், தந்தையை சுற்றினால் உலகை சுற்றியதாகதானே அர்த்தம்' எனக் கேட்க, சிவனும், பார்வதியும், 'ஆம்' என்க, தாய், தந்தையை சுற்றி பரிசை பெற்று விடுகிறார் விநாயகர்.
உலகை சுற்றிவிட்டு வந்த முருகன், விநாயகருக்கு பரிசு கொடுக்கப்பட்டதை அறிந்து, மிகவும் கோபம் அடைகிறார். கோபத்துடன் தென் மாநிலத்தில், குறிப்பாக தமிழகம் வந்தார்; பழநி மலைக்கு வந்தார்; அவரை சிவனும், பார்வதியும் சமாதானம் செய்தனர் என்பது, நாம் அறிந்த தகவல் தான்.
ஆனால், பரிசு அபகரிக்கப்பட்டதாக வெகுண்டெழுந்த முருகன், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, தன் உடலில் உள்ள சதைகளை எல்லாம் அழித்து, எலும்புடன் வந்து, உடலை வருத்தி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் கடும் தவம் புரிந்தார்.
அவரை சிவனும், பார்வதியும் சமாதானம் செய்தனர்; அதன் பின் தான் அவர் தென் மாநிலத்திற்கு, குறிப்பாக தமிழகம் வந்தார். கந்தபுராணத்தில் வரும் கிரவுஞ்ச மலை என்பது, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலை தான் என்று, அம்மாநில சுற்றுலாத்துறை, புராண வரலாறுகளை சுட்டிக்காட்டி, உறுதிப்படுத்துகிறது.
அதற்கேற்பவே, கிரவுஞ்ச மலையில் அருள்பாலிக்கும் முருகன், உருவமற்று அரூபமாக காட்சி தருகிறார். இவரை கார்த்திகேய சுவாமி என, வட மாநிலத்தில் போற்றி கொண்டாடுகின்றனர்.
மாநில அரசு முயற்சி
கார்த்திகேய சுவாமிக்கும், தென் மாநிலங்களுக்குள் உள்ள தொடர்பை வெளிப்படுத்தவும், தென் மாநிலங்களின் முருக பக்தர்கள், கிரவுஞ்ச மலையை நோக்கி வர வைக்கும் முயற்சியில், உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக, தமிழக ஆதீனங்களை எல்லாம் அழைத்து, கார்த்திகேய சுவாமிக்கு, 108 சங்காபிேஷக நிகழ்ச்சியை, கடந்த மே 16ல், முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை அன்று நடத்தியது. கோவை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆரூர் சுப்பிரமணிய குருக்கள் தலைமையில், 20 பேர் குழுவினர் சிறப்பு யாகசாலை பூஜை, சங்காபிேஷகத்தை நடத்தினர். கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.
திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் கோவில்களில் இருந்து, துணை ஆணையர்கள் உமா மகேஸ்வரி, சுரேஷ் ஆகியோர், சுவாமி மீது போர்த்தப்பட்ட வஸ்திரங்களை கொண்டு வந்திருந்தனர். அவை, கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பூஜைகள் நடந்தன.
தமிழகத்தில் இருந்து, சிரவை குமரகுருபர சுவாமிகள், பேரூர் மருதாச்சல அடிகளார், மயிலம் சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.

மேலும்,''சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், கார்த்திகேய சுவாமி கோவில், அதை சுற்றிய பகுதிகள் தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கார்த்திகேய சுவாமி கோவில், தேவி கோவில், அகஸ்தியர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்படும்,'' என்றார்.
தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக போற்றப்படுகிறது. வடமாநிலமான உத்தரகாண்டிலும், இந்த நடைமுறை உள்ளது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பரவச அனுபவம்
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மைய பகுதியில் இருந்து, 60 கி.மீ., பயணம் சென்றால், கனக சவுரி என்ற கிராமத்தை அடையலாம். அங்கிருந்து, 3.5 கி.மீ., துாரம், டிரெக்கிங் என்ற மலைப் பயணம் மேற்கொண்டு, கார்த்திகேய சுவாமி கோவிலை சென்றடையலாம். கோவில் அருகே மட்டும், 0.5 கி.மீ., துாரம் படிக்கப்பட்டில் பயணிக்க வேண்டும்.


