மது பெட்டிக்கு ரூ.50 கமிஷன் வழங்கியது அம்பலம்; ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முயற்சி
மது பெட்டிக்கு ரூ.50 கமிஷன் வழங்கியது அம்பலம்; ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முயற்சி
ADDED : மார் 11, 2025 04:59 AM

சென்னை : மதுபான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனையின் வாயிலாக, பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களுக்கு, ஒரு மது பெட்டிக்கு, 50 ரூபாய் கமிஷன் வழங்கியது, அமலாக்கத் துறை சோதனையில் அம்பலமாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் முயற்சியாகவே, இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக, 2003ல் இருந்து நேரடியாக மதுபான சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதனால், அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி, இலவச திட்டங்கள் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகள் அதிகம் விற்பனையாகிறதோ, அதனிடம் இருந்து, அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
பின், எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்த கட்சிக்கு வேண்டிய நிறுவனங்களிடம் இருந்து, அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. இதில், 90 மி.லி., 'குவார்ட்டர்' மது பாட்டிலுக்கு, 20 - 25 ரூபாய் செலவாகிறது. அதன் மேல் விதிக்கப்படும் வரி உள்ளிட்ட செலவுகளால், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே தான், பீர் உட்பட அனைத்து மது தயாரிப்பு செலவுக்கும் பொருந்தும்.
ஒரு பெட்டியில், 48 குவார்ட்டர் பாட்டிலும், பீர் பெட்டியில் 12ம் இருக்கும். டாஸ்மாக் கொள்முதல் செய்யும், ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும், தலா 40 - 50 ரூபாய் ஆட்சியாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. கடந்த 2017ல் இருந்து, கட்சி ஆதரவு நிறுவனத்திடம் அதிக கொள்முதல் என்ற நிலை மாறியது.
ஒரு பெட்டிக்கு நிர்ணயம் செய்துள்ள பணத்தை, எந்த நிறுவனம் கமிஷனாக வழங்குகிறதோ, அதனிடம் இருந்தே அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. இன்று வரை இதே நிலை தொடர்கிறது.
வேறு எந்த துறையில் இருந்தும், உடனுக்குடன் இவ்வளவு தொகை கமிஷனாக கிடைப்பதில்லை. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய, மது பெட்டியால் கிடைக்கும் கமிஷனை கட்சியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக, அமலாக்க துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையிலேயே சோதனை நடந்துள்ளது.
தற்போது, சோதனை நடந்த நிறுவனங்களிடம் இருந்து தான், கடந்த எட்டு ஆண்டுகளில், டாஸ்மாக் அதிக மது வகைகள் கொள்முதல் செய்திருப்பதும், ஒரு பெட்டிக்கு, 50 ரூபாயை கமிஷனாக, அந்த நிறுவனங்கள் வழங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் முயற்சியாகவும், இந்த சோதனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.