பாக்., பிரதமர் ஒரு கோழை; பார்லி.,யில் எம்.பி., சாடல்
பாக்., பிரதமர் ஒரு கோழை; பார்லி.,யில் எம்.பி., சாடல்
UPDATED : மே 10, 2025 07:23 PM
ADDED : மே 10, 2025 07:02 AM

இஸ்லாமாபாத்: 'இந்திய பிரதமர் மோடி பெயரை உச்சரிக்கக் கூட முடியாத கோழையாக இருக்கிறார் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்' என, பாக்., பார்லிமென்டில் அந்நாட்டின் எம்.பி., ஒருவர் காரசாரமாக நேற்று பேசினார்.
பாகிஸ்தான் பார்லிமென்டான தேசிய அசம்பிளியில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அந்நாட்டின் எம்.பி., ஒருவர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை, கோழை என கூறியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் குறித்து, பாகிஸ்தான் பார்லிமென்டில் நேற்று எம்.பி.,க்கள் காரசாரமாக விவாதித்தனர். அப்போது, எம்.பி., ஒருவர் பேசியதாவது: அங்கே, எல்லையில் நம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து போரிட்டு வருகின்றனர்.
ஆனால், நம் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு எதிராகவோ, போராடும் நம் வீரர்களுக்கு ஆதரவாகவோ எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை.
அவர் கோழையாக இருக்கிறார். 'இந்திய பிரதமர் மோடி' என்ற வார்த்தையை கூட அவர் உச்சரிக்கவில்லை. அந்த அளவுக்கு அவர் கோழையாக விளங்குகிறார். எல்லையில் போரிடும் வீரர்களுக்கு ஒரு குள்ளநரி தலைமை வகிக்கிறது; சிங்கம் தலைமையில் நம் வீரர்கள் இல்லை. நம் வீரர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
அவர் போலவே, தஹிர் இக்பால் என்ற மற்றொரு எம்.பி., பேசும் போது, பல முறை தேம்பி தேம்பி அழுதார். குரல் கம்மிய நிலையில், ''அல்லா தான் பாகிஸ்தானியர்களை காப்பாற்ற வேண்டும்,'' என்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனிர், கடந்த சில நாட்களாக தலைமறைவாகவே இருக்கிறார்.
அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால், அந்நாட்டின் ஊடகங்களில் பல விதமான செய்திகள் அவர் குறித்து வந்த வண்ணமாக உள்ளன.
போர் நிறுத்தம்
இதற்கிடையே,
இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்
செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள்
பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.