ADDED : ஜூன் 05, 2024 02:40 AM

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அக்கட்சி நிலை என்னாகும் என்ற கேள்வியும் அவர்கள் இடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பின், 2017 பிப்ரவரியில், இடைப்பாடி தொகுதி, எம்.எல்.ஏ.,வான பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உடன் இணைந்து, 2017 ஆகஸ்டில் கட்சியின் இணை பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றார்.
இவர்கள் தலைமையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், 2ம் இடத்தையே பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகள், லோக்சபா தொகுதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. அதில், பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில், தி.மு.க., 13, அ.தி.மு.க., 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதுபோல, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை, ஸ்டாலினிடம் பறிகொடுத்தனர். தொடர்ந்து நடந்த, ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, 2022ல் இடைக்கால பொதுச்செயலர், தொடர்ந்து பொதுச்செயலராக, பழனிசாமி உருவெடுத்தார். இவரது தலைமையில், அ.தி.மு.க., ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு, 'பல கட்சிகள் கூட்டணிக்குள் வரும்' என்ற எண்ணத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணியை, பழனிசாமி முறித்துக்கொண்டார். ஆனாலும், தே.மு.தி.க.,வை தவிர வேறு கட்சிகள் கூட்டணியில் சேரவில்லை. தற்போது தேர்தல் முடிவு வெளி வந்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளது. பல தொகுதிகளில், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வரும் தொடர் தோல்விகளால் தொண்டர்கள், நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
போஸ்டர்
லோக்சபா தேர்தல் முடிவு, அ.தி.மு.க.,வினரை விரக்தி அடைய செய்துள்ள நிலையில், சேலத்தில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'சிந்திப்போம் செயல்படுவோம் சின்னம்மா தலைமை ஏற்போம்' என கூறி, 'செங்கோட்டு வேலவன் சேலம் மாநகர் மாவட்டம்' என குறிப்பிட்டு, அ.தி.மு.க., கொடி வண்ணத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- நமது நிருபர்-