'மெகா' கூட்டணி அமைக்க பழனிசாமி திட்டம்! வரும் 17ல் இணைப்பு விழா?
'மெகா' கூட்டணி அமைக்க பழனிசாமி திட்டம்! வரும் 17ல் இணைப்பு விழா?
ADDED : ஜன 08, 2026 03:29 AM

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்த நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 4ம் தேதி திருச்சி வந்தார். அவருடன், பழனிசாமி சார்பில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு நடத்தினார். அப்போது, தி.மு.க.,வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, அக்கட்சியை தோற்கடிக்க முடியும் என அமித் ஷா கூறியுள்ளார். மேலும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பழனிசாமியை, பா.ம.க., தலைவர் அன்புமணி சந்தித்து, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். அப்போது பேட்டியளித்த பழனிசாமி, 'விரைவில் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்' என்றார்.
அதை தொடர்ந்து, பழனிசாமி நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு, 'இண்டிகோ' விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று இரவு முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருடன் இணைந்து சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில், பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்த பழனிசாமி, பா.ஜ.,வுக்கான தொகுதிகள் குறித்தும் பேசியுள்ளார். தே.ஜ., கூட்டணிக்கு வர, தே.மு.தி.க., முரண்டு பிடித்து வருவது குறித்தும் அமித் ஷாவுடன் பேசிய பழனிசாமி, தே.மு.தி.க.,வை எப்படி கையாள்வது என்பது குறித்த ஆலோசனையையும் கேட்டுள்ளார். பின், தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்த ஊழல் குறித்த பட்டியலையும் வழங்கி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
பொங்கல் விழாவில் மோடி
கன்னியாகுமரியில், வரும் 28ல் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அப்போது மோடியுடன், தமிழகத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மேடையேற வேண்டும் என்பதால், கூட்டணியை விரைவாக இறுதி செய்ய, பா.ஜ., தலைமை, அ.தி.மு.க.,வுக்கு அறிவுறுத்தி உள்ளது. அந்த கூட்டத்தில், 5 லட்சம் பேர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தரும் 28ல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் வரவுள்ளதாகவும்; காங்கிரஸ் கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

