ஆட்சி மேலிடத்துக்கு ரூ.5,400 கோடி வருமானம்; டாஸ்மாக் வாயிலாக செல்வதாக பழனிசாமி தகவல்
ஆட்சி மேலிடத்துக்கு ரூ.5,400 கோடி வருமானம்; டாஸ்மாக் வாயிலாக செல்வதாக பழனிசாமி தகவல்
UPDATED : ஜூலை 22, 2025 07:34 AM
ADDED : ஜூலை 22, 2025 03:22 AM

'மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் என்றாலே, அது செந்தில் பாலாஜி என ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தப்பட்டுள்ளது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தில் நேற்று மன்னார்குடி மேல ராஜ வீதியில் பழனிசாமி பேசியதாவது:
விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையம் கொண்டு போனால், வாங்குவதற்கு காலதாமதம் செய்கின்றனர். 18,000 நெல் மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கியுள்ளனர். வருவது மழைக்காலம்; மழையில் நனைந்தால் அரசுக்குத் தான் நஷ்டம்.
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து பெறும் நெல்லுக்கு உடனுக்குடன் பணம் கொடுத்தோம். ஆனால், விவசாயிகள் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு கசக்கிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் தான் இரு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வங்கியில் பயிர் கடன் கொடுப்பதில்லை. 'சிபில் ஸ்கோர்' கேட்டு விவசாயிகளை இம்சிக்கின்றனர். இதை, தி.மு.க., தட்டிக் கேட்காத கட்சியாக உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு, 53,000 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக சொல்கின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம்; பச்சை பொய்.
அ.தி.மு.க., அரசை குறை சொல்ல எள் முனையளவுக்கும் ஆதாரமில்லை. என் மீது, தி.மு.க., அரசு வழக்கு போட்டது; பின், அதை வாபஸ் பெறுவதாக கூறியது.
ஆனால், நான் ஏற்கவில்லை; வழக்கை நடத்தினேன். உங்கள் முன் நிரபராதியாக நிற்கிறேன். ஒரு போதும் வாய்தா வாங்கி காலம் கடத்த மாட்டேன்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு ஒன்று உண்டென்றால், அது தி.மு.க., அரசு தான். கருணாநிதி முதல்வராக இருக்கும்போதும் ஊழல் நடந்தது.
இன்றைக்கும் டாஸ்மாக்கில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் என்றால், அது செந்தில் பாலாஜி என்று ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தப்பட்டுள்ளது.
அவர், 400 நாட்கள் பத்திரமாக ஜெயிலில் இருந்துவிட்டு வந்துள்ளார். டாஸ்மாக் மதுக்கூடங்களை எல்லாம் கரூர் கம்பெனி ஏலத்தில் எடுத்து நடத்துகிறது.
ஒரு நாளைக்கு, 15 கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து வருமானம் வருகிறது. ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய் ஆட்சி மேலிடத்துக்கு போவதாக தகவல். அமலாக்கத்துறை இன்னும் தோண்டி வருகிறது,
ஊழல் செய்த அனைவர் மீதும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் கேட்டுக் கொண்டதன்படி, மத்திய அரசு தமிழகத்துக்கு 2,999 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் 39 எம்.பி.,க்களும் பெஞ்சை தேய்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மன்னார்குடியில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் மேற்கொண்டார்.
- நமது நிருபர்