கூட்டணியில் தே.மு.தி.க.,வை நழுவ விடும் பழனிசாமி; மா.செ.,க்கள் அதிருப்தி
கூட்டணியில் தே.மு.தி.க.,வை நழுவ விடும் பழனிசாமி; மா.செ.,க்கள் அதிருப்தி
ADDED : ஜன 31, 2026 04:33 AM

தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வரும் வாய்ப்புகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நழுவ விடுவதாக, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில் பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் தனி கூட்டணியாக சென்றுவிட்டன. அப்போது, அ.தி.மு.க.,வுக்கு கைகொடுத்தது தே.மு.தி.க., மட்டும் தான்.
அதன் வாயிலாக, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, அரியலுார், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியை விட அதிக ஓட்டுகளை பெற்றோம். சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளில், 2021 சட்டசபை தேர்தலை விட, 10,000க்கும் அதிகமான ஓட்டுகள் கூ டுதலாக கிடைத்தன.
சட்டசபை தேர்தலில், பெரம்பலுார், அரியலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், அ.தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., கூட்டணி பலம் தரும்.
வழக்கமாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி போன்ற மூத்த தலைவர்கள் தான், தே.மு.தி.க-.,வுடன் கூட்டணி பேசுவர்.
இம்முறை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவனை வைத்து, தே.மு.தி.க.,வுடன் பழனிசாமி பேசுகிறார். இதிலிருந்தே, அக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர, பழனி சாமி முயற்சிக்கவில்லை என தெரிகிறது.
அதனால் தான், கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,வை, இந்த சட்டசபை தேர்தலில் பழனிசாமி நழுவ விடுகிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், இனியும் தாமதிக்காமல், தே.மு.தி.க.,வுடன் பழனி சாமி நேரடியாக பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -

