ADDED : செப் 27, 2024 10:49 PM

புதுடில்லி:இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளில் விளைச்சல் குறைந்துள்ளதால், உலகின் மலிவான சமையல் எண்ணெய் என்ற அந்தஸ்தை 'பாமாயில்' இழந்து வருகிறது.
உலகளாவிய பாமாயில் வினியோகத்தில், 85 சதவீத பங்கு வகிக்கும் இந்தோனேஷியா மற்றும் மலேஷிய பனைத் தோட்டங்கள், நிதி நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன.
புதிய பனை மரங்கள் காய்க்க நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்பதால், அங்குள்ள சிறு தோட்டக்காரர்களும் வயதான மரங்களை வெட்டி, மீண்டும் நடவு செய்ய தயங்குகின்றனர். இதையடுத்து, சோயா பீன் ஆறு மாதங்களிலேயே காய்த்து விடும் என்பதால், பனை விவசாயிகள் பலர், அதன் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
இதனால் பனை விளைச்சல் சரிந்துள்ளதால், நடப்பாண்டில் மட்டும் பாமாயில் விலை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், சோயா பீன் எண்ணெயின் விலை 9 சதவீதம் குறைந்துள்ளது.
உலகிலேயே அதிக பாமாயில் இறக்குமதி செய்யும் நாடாக விளங்கும் இந்தியாவில், விலை சற்றே அதிகரித்துள்ள போதிலும், உடனடியாக பெரிய மாற்றம் இருக்காது என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உணவகங்கள், பிஸ்கட் தயாரிப்பாளர்கள் என பாமாயில் அதிகம் பயன்படுத்துபவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்துவர் என்றும், குடும்பங்கள் செலவை குறைக்க பிற எண்ணெய் ரகங்களுக்கு மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.