3 மாதமாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பாம்பன் பாலம்
3 மாதமாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பாம்பன் பாலம்
UPDATED : மார் 20, 2025 07:29 AM
ADDED : மார் 20, 2025 06:27 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி பணி 100 சதவீதம் முடிந்தும் மூன்று மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாம்பன் கடலில் ரூ.530 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி 2020ல் துவங்கியது. இப்பாலம் நடுவில் லிப்ட் முறையில் இயக்கப்படும் துாக்கு பாலம் பொருத்தப்பட்டு பாலம் கட்டுமானப் பணி முடிந்தது. இதனை நவ.,13ல் ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி புதிய பாலத்தில் ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார்.இதனால் திறப்பு விழா தள்ளிப் போனது. பின் டிச.,15க்குள் குறைகளை சரிசெய்து 100 சதவீதம் பாலம் பணி நிறைவடைந்த நிலையில் பாலம் வலுவாக உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதன்பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து மார்ச் இறுதியில் திறப்பு விழா நடக்கும் என தெரிவித்தார். ஆனால் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் ரயில்வே அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் புதிய ரயில் பாலம் 3 மாதங்களாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ரயிலில் வரும் பக்தர்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனத்தில் ராமேஸ்வரம் வருகின்றனர்.
முதியோர், குழந்தைகளுடன் வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தனியார் வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ. 2000 வரை வாடகை கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.