பன்னீர்செல்வம் மாநாடு தள்ளிவைப்பு; பாதயாத்திரை துவக்குகிறார் ரவீந்திரநாத்
பன்னீர்செல்வம் மாநாடு தள்ளிவைப்பு; பாதயாத்திரை துவக்குகிறார் ரவீந்திரநாத்
ADDED : ஆக 02, 2025 03:30 AM

அடுத்த மாதம் 4ல், மதுரையில் நடத்துவதாக அறிவித்துள்ள மாநாட்டை தள்ளி வைக்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார்.
மாநாட்டிற்கு முன்னதாக, அவரது மகன் ரவீந்திரநாத் தலைமையில், 500 பேர், அ.தி.மு.க., மீட்பு எழுச்சி பயணத்தை கன்னியாகுமரியில் துவக்கி, கும்மிடிப்பூண்டியில் நிறைவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்ட பின், தனக்கு முக்கியத் துவம் அளிக்கப்படாதது, பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்காதது போன்ற காரணங்களால், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதன்பின் முதல்வர் ஸ்டாலினை, ஒரே நாளில் இரு முறை சந்தித்து பேசினார்; தொடர்ச்சியாகவும் சந்தித்து வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்,'' என்றார்.
முன்னதாக, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், மதுரையில் செப்., 4ம் தேதி மாநாடு நடத்தப்படும்.
'அது, அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாநாடாக அமையும்' என பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், செப்., மாதத்தில் மாநாடு நடத்த பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க.,வின் முப்பெரும் விழா செப்., மாதத்தில் நடக்க உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு பிப்., 24ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று மாநாடு நடத்தி, தேர்தல் கூட்டணி முடிவை அறிவிக்கலாம் என,பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அ.தி.மு.க.,வை தீய சக்திகளிடமிருந்து மீட்கும் பாதயாத்திரையை துவக்க, பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் திட்டமிட்டுள்ளார்.
அவர் கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். அவருடன் பாதயாத்திரையில், 500 பேர் பங்கேற்கின்றனர்.
பாதயாத்திரை ஒரு வருவாய் மாவட்டத்தை கடக்கும்போது, அதன் எல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையிலும், பாதயாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

