UPDATED : ஆக 07, 2025 06:26 AM
ADDED : ஆக 07, 2025 02:00 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை துவக்கி, தனியாக நிர்வாகிகளை நியமித்தார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைய, அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதேநேரம், சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவான பிறகு, லோக்சபா தேர்தலில் தங்களுடன் இருந்த பன்னீர்செல்வத்தை பா.ஜ., கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த பன்னீர், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக, தன் அமைப்பிற்கு, காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று மதுரை புறநகர் வடக்கு, வேலுார் மாநகர், வட சென்னை மத்திய மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

