'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு': காங்., நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு': காங்., நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
ADDED : ஏப் 14, 2025 05:05 AM

சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில், கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் வெளியிட்ட நிலையில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகி ஒட்டிய போஸ்டர், தி.மு.க., கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன; கூட்டணி பேச்சு நடத்தி, அதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
கூட்டணி ஆட்சி
ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள், ம.நீ.ம., மற்றும் சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் இடம் பெற வைப்பதற்கான முயற்சியில், பா.ஜ., டில்லி மேலிடம் ஈடுபட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
த.வெ.க., தலைவர் விஜய், தன் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் சேர்ந்து, கூட்டணி ஆட்சி அமைப்போம் என, அறிவித்துள்ளார்.
'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை, வி.சி., தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியும், கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்த துவங்கி உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் மாநில செயலர் ஷெரீப் ஒட்டியிருந்த போஸ்டர்களில், 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டர், தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளை வெற்றி இலக்காக வைத்துள்ள நிலையில், காங்கிரசின் கூட்டணி ஆட்சி கோஷம், தி.மு.க., தொண்டர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, போஸ்டர் ஒட்டிய ஷெரீபிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.
சதி திட்டம்
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., கூட்டணி ஒற்றுமையை குலைக்க, பல்வேறு சதி திட்டங்களை தீய சக்திகள் தீட்டி வருகின்றன. ஒற்றுமையாக இருக்கும் காங்., - தி.மு.க., கூட்டணியில், குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ள வாசகங்கள் கண்டிக்கத்தக்கவை.
கூட்டணி குறித்து பேச, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உங்களுடைய அநாகரிகமான செயல் மட்டுமல்ல; ஒழுங்கீனமான செயலுமாகும். குமரி அனந்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏழு நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளேன். என் பிறந்த நாளையொட்டி, தாங்கள் ஒட்டிய சுவரொட்டி, விளம்பர செயல். இது, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டது. இதற்கான தகுந்த விளக்கத்தை, 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து அளிக்க வேண்டும்.
தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்து பேசி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

