கொரோனா கால கணக்கு பற்றி பேசி 'நீயா நானா' விவாதம் நடத்திய கட்சியினர்
கொரோனா கால கணக்கு பற்றி பேசி 'நீயா நானா' விவாதம் நடத்திய கட்சியினர்
UPDATED : மார் 20, 2025 03:10 AM
ADDED : மார் 20, 2025 02:43 AM

சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - சி.விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., ஆட்சியின்போது, தமிழகத்தை கடனாளியாக்கி விட்டீர்கள் என, தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர். இப்போது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 1.32 லட்சம் ரூபாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4.13 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
இப்படி மூச்சு முட்டும் அளவுக்கு கடன் வாங்க வேண்டுமா; வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்குவது சரியா; வாங்கிய கடனில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கடந்த 2015 - -16ல், மாநில மொத்த உற்பத்தியில், 1 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை, அ.தி.மு.க., ஆட்சியின் இறுதியில், 2020 - -21ல், 3.28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியின் திறமையான நிதி மேலாண்மையில், வருவாய் பற்றாக்குறை 1.17 சதவீதமாக குறைந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 2017 முதல் 2021 வரை, மொத்த கடனில் 57 சதவீதம் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டவே வாங்கப்பட்டுள்ளது; தி.மு.க., ஆட்சியில் இதை 47.50 சதவீதமாக குறைத்துள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: 2020 - -21 அ.தி.மு.க., ஆட்சியில், அதிக கடன் வாங்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறினார். 2020 - -21 கொரோனா பொது முடக்க காலம். அப்போது, அரசுக்கு வர வேண்டிய வருவாய் நின்று போனது. அதே நேரத்தில், கொரோனாவை எதிர்கொள்ள கடன் வாங்க வேண்டியிருந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோதும் கொரோனா காலம் தான். நாங்களும் நெருக்கடியை எதிர்கொண்டோம். ஆனாலும், நிதி நிலையை சிறப்பாக கையாண்டோம். தமிழகம் எதையும் தாங்கும் பொருளாதாரம் என்பதால், இயங்கி கொண்டே இருந்தோம்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 9,400 கோடி ரூபாய், கால்வாய், நீர்த்தேக்கங்களுக்கு, 4,300 கோடி ரூபாய், சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கு 2,910 கோடி ரூபாய், கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 2,000 கோடி ரூபாய், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு 2,000 கோடி ரூபாய்.
முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 1,644 கோடி ரூபாய், பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாய், அம்ருத் திட்டத்திற்கு 1,650 கோடி ரூபாய் என, மூலதன செலவுகளை செய்திருக்கிறோம்.
இது தவிர, சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடுவதை, செலவாக பார்க்காமல், ஒட்டுமொத்த சமுதாயத்தை உயர்த்தும் சமூக மூலதனமாகவே பார்க்கிறோம்.
பழனிசாமி: 2020- - 21ல் 10 மாதங்கள் கொரோனா பொது முடக்கம் இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அரசுக்கு வருவாய் வர துவங்கி விட்டது.
அமைச்சர் தியாகராஜன்: அ.தி.மு.க., ஆட்சியில் பொது முடக்கம் இருந்ததால், வருவாய் குறைவு இருந்தது. ஆனால், பொது முடக்கத்தால் கொரோனாவின் தீவிரம் குறைவு என்பதால், செலவும் குறைவாக இருந்தது. ஆனால், 2020- - 21 தி.மு.க., ஆட்சியில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், மருத்துவமனைகள் சிகிச்சை செலவு அதிகமாக இருந்தது.
கொரோனாவுக்கு பின், நாட்டிலேயே தமிழகத்தின் நிதி நிலை முன்னேற்றம் முதலிடத்தில் இருந்தது.
இவ்வாறு விவாதம் நடந்தது.