ADDED : பிப் 04, 2024 03:03 AM

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா; இவரை அதிகம் பேர் பார்த்திருக்க முடியாது. எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் தலை காட்டாதவர்.
பவாருக்கு 75 வயதான போது, நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். பின் தேசியவாத காங்., கட்சியிலிருந்து ராஜினாமா செய்த போது, ஒரு மூலையில் நின்றிருந்தார் பிரதிபா. இதைத் தவிர அவரை எந்த ஒரு பொது மேடையிலும் பார்த்திருக்க முடியாது. பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.,வுமான ரோஹித் பவார் ஒரு தொழிலதிபர். மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, இவரை விசாரிக்க சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை; இவர் ஆஜராகும் தினத்தன்று, அமலாக்கத்துறை அலுவலகம் முன் கட்சியினர் கூடினர். அப்போது காரிலிருந்து ரோஹித்துடன், பவாரின் மனைவி பிரதிபாவும் இறங்கினார்; இதைப் பார்த்ததும் தொண்டர்கள் ஆவேசமாகி, மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.
பலருக்கு ஆச்சரியம்... எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காத இவர் எப்படி இங்கு வந்தார்? தன் பேரனுக்கு ஆதரவாக வந்தார் என சொல்லப்படுகிறது. 'கட்சியில் ரோஹித்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்., பவார் பிரிவிற்கு இவர் தான் செய்தி தொடர்பாளர். மாநில அரசியலில் பவாரின் வாரிசு இவர்; தேசிய அரசியலுக்கு பவாரின் மகள் சுப்ரியா' என்கின்றனர் கட்சியினர்.