ரூ.1,000 பரிசுத்தொகை கிடைக்காததால் மக்கள் அதிருப்தி! 'டோக்கன்' கூட வாங்காமல் கடும் விரக்தி
ரூ.1,000 பரிசுத்தொகை கிடைக்காததால் மக்கள் அதிருப்தி! 'டோக்கன்' கூட வாங்காமல் கடும் விரக்தி
ADDED : ஜன 08, 2025 11:52 PM

கோவை: பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பு, எப்படியும் வந்து விடும் என்று நேற்று மாலை வரை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், அறிவிப்பு ஏதும் வராததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டோக்கன் வாங்கவே பலர் முன்வராத நிலையில், 10 லட்சம் டோக்கன்கள் வழங்கி விட்டதாக, அதிகாரிகள் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவையில் கடந்த 3ம் தேதி முதல், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது என, அரசு தரப்பில் தெரிவித்ததால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதனால் டோக்கன் வாங்குவதில், மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக, கோவை மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வழங்க 10 லட்சம் டோக்கன்கள் வழங்கி விட்டதாக, அதிகாரிகள் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ரேஷன் கடை ஊழியர்கள் சிலரிடம் விசாரித்த போது, 'கடந்த ஆண்டு, 1,000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு கொடுத்த போது, கியூவில் நின்று டோக்கன் வாங்கி சென்றனர். பலர் டோக்கன் கிடைக்கவில்லை என, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால் இந்த முறை, பணம் இல்லை என்பதால் டோக்கன் வாங்க அழைத்தும், பெரும்பாலான கார்டு தாரர்கள் வரவில்லை. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மட்டும், டோக்கன் கொடுத்து இருக்கிறோம்.
டோக்கன் இல்லை என்றாலும், பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கடைகளில், 50 சதவீதம் பேருக்கு மேல் டோக்கன் பெறவில்லை' என்றனர்.
கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணம் இல்லாததால் பொங்கல் தொகுப்பு வாங்குவதில், மக்களுக்கு ஆர்வமில்லை என்பது உண்மைதான். ஆனால் அதை நாங்கள் வெளிப்படையாக கூற முடியாது. மக்கள் அதிருப்தியில் இருப்பது அரசுக்கும் தெரியும்.
அதனால், இறுதி நேரத்தில் அறிவிப்பு வரும் என்ற தகவலும் உள்ளது. ஆனால் நாளை முதல் (இன்று) பொங்கல் தொகுப்பு வழங்க இருப்பதால், இந்தாண்டு 1,000 ரூபாய் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதுதான், தற்போது வரை உள்ள நிலை' என்றார்.

