நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்கள்; அரசியலுக்கு வந்தால் எடுபடாது
நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்கள்; அரசியலுக்கு வந்தால் எடுபடாது
UPDATED : ஏப் 17, 2025 03:28 AM
ADDED : ஏப் 16, 2025 09:51 PM

மதுரை:மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடக்கவுள்ள நிலையில் அதற்கான அலுவலகத்தை வண்டியூரில் மதுரை ஆதினம் திறந்து வைத்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி குறித்து, நான் குறை கூற முடியாது. நெல்லையில் பள்ளி மாணவனை சக மாணவன் வெட்டிய சம்பவத்தில் அரசை நாம் குறை சொல்ல முடியாது. முதலில் பெற்றோர் தங்களது குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும். அதிகமாக கண்டித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து விடுகிறார்கள். இதற்கு காரணம் சினிமா தான்.
சினிமாவில் அனைத்து வன்முறைகளையும் காட்டுவதை, மாணவர்கள் உள்வாங்கிக் கொள்கின்றனர். சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும். சினிமா மோகத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை திருத்த முடியாது.
சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர். அவர் அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை. நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்களே தவிர, அரசியலுக்கு வந்தால் எடுபடாது. சினிமாவும் அரசியலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் எடுபட்டது.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு அரசியல் சட்டத்தை மீறுவது போன்று உள்ளது. அவர் பதவியில் இருக்கக்கூடாது. எந்த சமயத்தையும் பிறர் மனம் புண்படும் வகையில் பேசக்கூடாது என்று அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும். நான் 1960 முதல் ஒன்பது வயதிலிருந்து ஹிந்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். 1973ல் மிசா சட்டத்தை எதிர்த்து போஸ்டர் ஒட்டி இருக்கிறேன். சிறு வயதிலேயே மிசா சட்டத்தை பார்த்து விட்டு தான், இங்கே வந்து அமர்ந்துள்ளேன்.
மக்களை நெறிப்படுத்தும் பணிகளை சைவ சமயம் செய்கிறது.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் கடமை, உரிமை நமக்கு உள்ளது. கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை பணம் செலுத்துவதில்லை. தமிழக அரசு குத்தகை பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநியில், தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் அரசியல்வாதிகள் பங்கேற்றதால் அது அரசியல் மாநாடாக நடந்தது. மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகவாதிகள் மட்டுமே பங்கேற்பதால், ஆன்மிக மாநாடாக நடைபெறும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
இவ்வாறு கூறினார்.