sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா டிஜிட்டல் யுகத்துக்கான மாற்றம்

/

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா டிஜிட்டல் யுகத்துக்கான மாற்றம்

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா டிஜிட்டல் யுகத்துக்கான மாற்றம்

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா டிஜிட்டல் யுகத்துக்கான மாற்றம்


ADDED : ஜன 17, 2026 12:59 AM

Google News

ADDED : ஜன 17, 2026 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தங்களின் வாழ்வாதார வருமானத்துக்காக இன்னும் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். விவசாயமும் பூச்சிக்கொல்லியும் இன்று பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்டன. இத்தகைய சூழலில், பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள 'பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா' வரைவு மீது பொதுமக்களின் கருத்துகளை பிப்ரவரி 4ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பில் முன்னிலை

ரசாயன உற்பத்தியில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்திலும், ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 330 கோடி டன் ரசாயன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ரசாயன உரங்களின் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், பூச்சிக்கொல்லிகள், இந்திய விவசாயத்தில் தவிர்க்க முடியாத ஒரு கருவியாக மாறியுள்ளன.

பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கும், உற்பத்தியை நிலைநிறுத்துவதற்கும் பூச்சிக்கொல்லிகள் உதவுகின்றன. பூச்சிக்கொல்லிகள் இல்லையெனில், வயல்களில் இருந்து உணவு பொருட்கள் நம் உணவு தட்டுக்கு வந்து சேர்வதே கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையும் உள்ளது.

பயன்பாடு குறைவு

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 400 கிராம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் 1.83 கிலோ வரை பயன்படுத்துகின்றன. குறைந்த அளவு பயன்பாடு நல்லது போல தோன்றினாலும், அது எப்போது, எப்படி, எந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்கும் முறைகள் இல்லாதபோது, அதன் விளைவுகள் ஆபத்தாக மாறுகின்றன.

பயிர்கள் பாதிக்கப்படும் போது விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உடனடி தீர்வு என்ற கோணத்தில், வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் அதிக வீரியமுள்ள பூச்சிக்கொல்லிகளை பயிர்கள் மீது தெளிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பு பண்ணையோடு நின்று விடுவதில்லை; மனித ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. பூச்சிக்கொல்லி விஷமயமாக்கலால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,700 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மாற்றங்கள்

இந்த பின்னணியில், 1968ம் ஆண்டு பூச்சிக்கொல்லி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த காலகட்டத்தில் இருந்த இந்தியாவும், இன்றைய இந்தியாவும் முற்றிலும் வேறுபட்டவை. அப்போது உணவு பற்றாக்குறை, குறைந்த அறிவியல் தரவுகள், குறைந்த அளவிலான பூச்சிக்கொல்லி தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ட்ரோன் மூலம் தெளிக்கும் தொழில்நுட்பம், டிஜிட்டல் வினியோக தொடர், ஏற்றுமதி சந்தை போன்றவை அப்போது இல்லை.

இந்த மாற்றங்களை உள்ளடக்கி, நவீன காலத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டதே, இப்போதைய புதிய பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா.

பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படும்போது அவை கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் இன்றி ரசாயனங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது. மாநில அரசுகளிடமிருந்து உரிமம் பெற்று மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதும் இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், நச்சுத்தன்மை மற்றும் பாதுகாப்பு சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. காலாவதியான பூச்சிக்கொல்லிகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகளும் இதில் வகுக்கப்பட்டுள்ளன. சட்டத்தை அமல்படுத்த அதிகாரங்களும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியத்துக்கு கேடு

கடந்த இரண்டு தலைமுறைகளில் இந்திய விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், பழைய சட்டங்களை பொருத்தமற்றவையாக மாற்றியுள்ளன. உணவு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் நுகர்வோர் இப்போது அறிய விரும்புகின்றனர்.

போலி மற்றும் கள்ள பூச்சிக்கொல்லிகள் சந்தைகளில் நுழைவது, மனித ஆரோக்கியத்துக்கும் ஏற்றுமதி சந்தைக்கும் பெரும் சவாலாக உள்ளது. ரசாயன எச்சம் காரணமாக ஏற்றுமதி பொருட்கள் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்த இடைவெளிகளை சரிசெய்யவே புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. 57 ஆண்டுகள் பழமையான சட்டத்தை மாற்றி, டிஜிட்டல் காலத்துக்கு ஏற்ற விதிமுறைகள் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த சட்டத்தின்கீழ், மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழு என்ற இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை ஆகிய அனைத்தும் டிஜிட்டலாக பதிவு செய்யப்பட்டு தேசிய பூச்சிக்கொல்லி பதிவேட்டில் சேமிக்கப்படும். லேபிள், பேக்கேஜிங், போக்குவரத்து என அனைத்திலும் கண்காணிப்பு அமையும். விவசாயிகள் பாதுகாப்பும், மாநில அரசுகளுக்கான உடனடி தடை அதிகாரமும் இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுவரை பூச்சிக்கொல்லிகளை சுற்றி எழுந்த பல கேள்விகளுக்கும், இந்த புதிய பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா தெளிவான பதிலை வழங்க முயற்சிக்கிறது.

முக்கிய அம்சங்கள்


1. பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
2. உரிய ஆவணங்கள் இன்றி பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது.
3. பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, விற்பனை முழுதும் டிஜிட்டலாக பதிவு செய்ய வேண்டும்.
4. பூச்சிக்கொல்லிக்கான இரண்டு புதிய அமைப்புகள் துவங்கப்படும்.








      Dinamalar
      Follow us