ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்: 6 முக்கிய துறைகளில் கவனம்
ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்: 6 முக்கிய துறைகளில் கவனம்
ADDED : டிச 21, 2024 01:55 AM

புதுடில்லி: நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி, 25 மாதங்களில் இல்லாத வகையில் கடந்த நவம்பரில் குறைந்ததன் காரணமாக, வருகிற ஜனவரியில், ஒரு மெகா சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டத்துக்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:
நடப்பாண்டு நவம்பரில், நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி, கடந்த 25 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்திருந்தது. இந்நிலையில், ஏற்றுமதி அதிகரிப்பில் கவனம் செலுத்த மத்திய வர்த்தகத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் ஜனவரியில் மெகா சந்திப்பு நடத்த உள்ளது.
உலகளவில், 60 சதவீத இறக்குமதி பங்களிப்பை கொண்ட, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய 20 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நாடுகளுக்கு பொறியியல் மற்றும் மின்னணு பொருட்கள் தவிர, ரசாயனங்கள், பிளாஸ்டிக், மருந்து, மருந்துப் பொருட்கள், விவசாயம் மற்றும் ஜவுளி ஆகிய ஆறு முக்கிய துறைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த ஆறு துறைகளும், உலக இறக்குமதியில் 67 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
இச்சந்திப்பில், மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், வணிகம் மற்றும் நிதி அமைச்சகங்களின் முக்கிய அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தனர்.

