நட்டாவை சந்திக்கும் திட்டம்: பா.ம.க., - தே.மு.தி.க., ஏமாற்றம்
நட்டாவை சந்திக்கும் திட்டம்: பா.ம.க., - தே.மு.தி.க., ஏமாற்றம்
ADDED : பிப் 13, 2024 12:03 AM

சென்னை: தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்கலாம் என்று கருதிய தே.மு.தி.க., -பா.ம.க.,வின் திட்டத்தை, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முறியடித்து விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பா.ஜ.,வட்டாரங்கள் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அக்கட்சிதலைவர்களுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களிடம்,'தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, அதிக தொகுதிகளை ஒதுக்கினால், பா.ஜ., அணிக்கு வருகிறோம்' என, சிறிய கட்சிகள்தெரிவிக்கின்றன.
அதோடு இல்லாமல் அக்கட்சிகள், பா.ஜ., தலைவர்கள் பேசிய விபரத்தை கசியவிட்டு, 'நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல், உங்கள் அணிக்கு வர வேண்டுமானால், அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என,தி.மு.க., - அ.தி.மு.க.,விடமும் பேசுகின்றன.
இந்த சூழலில், அண்ணாமலையின், 200வது தொகுதி பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, ஞாயிறன்று பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார். கிண்டி நட்சத்திர ஹோட்டலில், சில கட்சி தலைவர்கள், நட்டாவை சந்திக்கதிட்டமிட்டனர்.
பா.ஜ.,வுடன் கூட்டணி பேசும் கட்சிகள், திராவிட கட்சிகளுடனும் பேசி வருவதை, உளவு துறை வாயிலாக கட்சி மேலிடம் அறிந்துள்ளது.
விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த நட்டா வருவார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.
அதேபோல், மரியாதை நிமித்தமாக நட்டாவை சந்திக்க பா.ம.க., நிர்வாகிகளும் திட்டமிட்டனர். ஆனால், நட்டா மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், இரு கட்சி நிர்வாகிகளும் நட்டாவை சந்திப்பதன் வாயிலாக, தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் பேரம் பேச வாய்ப்பு ஏற்படும் என்று பா.ஜ., கருதியது. அதனால் தான், கூட்டணி கட்சி தலைவர்களை, நட்டா சந்திக்கும் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.