மாஸ்டர் பிளானில் திட்டங்கள் தயார்; செயல்படுத்துவது யார்?
மாஸ்டர் பிளானில் திட்டங்கள் தயார்; செயல்படுத்துவது யார்?
UPDATED : பிப் 06, 2024 07:39 AM
ADDED : பிப் 06, 2024 12:21 AM

விரைவில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள புதிய மாஸ்டர் பிளான் வரைவில், கோவைக்கு ஏராளமான பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வரும் 2041 வரையிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள கோவை மாஸ்டர் பிளான் வரைவு, விரைவில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம பஞ்சாயத்துகள் என மொத்தம் 1531 சதுர கி.மீ., பரப்புக்கு, இந்த மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள மாஸ்டர் பிளானில் குறிப்பிடப்பட்ட திட்டங்களில் நிறைவேற்றப்படாத பல திட்டங்களும், இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய ரோடுகளை இணைக்கும் சுற்றுச்சாலை, லங்கா கார்னர் கீழ்பாலம், கிக்கானி பள்ளி கீழ்பாலங்கள் விரிவாக்கம், மேட்டுப்பாளையம் பை பாஸ் உட்பட பல திட்டங்கள், அதில் செயல்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வரைவில், கடந்த 30 ஆண்டுகால வளர்ச்சியும் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் கோவையின் வடகிழக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதியே அதிகமான வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. வரும் காலத்தில், சத்தி ரோடு, அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் நகரம் வளர்ச்சி பெறுமென்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகளும், வரைவில் இடம் பெற்றுள்ளன. அதில், காரணம்பேட்டையிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை யிலான 200 அடி அகலமுள்ள கிழக்கு புறவழிச்சாலையும் ஒன்றாகும். வெள்ளலுார், நீலம்பூர் மற்றும் வெள்ளமடை ஆகிய பகுதிகளில், பஸ் முனையங்கள் அமைக்கவும், இதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கருமத்தம்பட்டி, சூலுார், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், பூலுவபட்டி ஆகிய இடங்களில் சரக்கு முனையங்கள், ராசிபாளையத்தில் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்', கள்ளப்பாளையம், செட்டிபாளையத்தில் தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டுமென்றும், வரைவில் புதிய திட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன.
அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடுகளில் 39 கி.மீ., துாரத்துக்கு, இரண்டு வழித்தடங்களில், முதற்கட்டமாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரைவில், நான்கு முக்கியமான ரோடுகளில், மக்கள் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெள்ளலுார்-உக்கடம்-கணியூர் -40.9 கி.மீ., கலெக்டர் ஆபீஸ்-வலியம்பாளையம் பிரிவு-கணேசபுரம்-24.6 கி.மீ., காரணம்பேட்டை-பாப்பம்பட்டி பிரிவு-பெரியநாயக்கன்பாளையம்-50.7 கி.மீ., டவுன்ஹால்- காருண்யா நகர் -22.7 கி.மீ., ஆகிய நான்கு வழித்தடங்களில், இந்த திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்றும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய மாஸ்டர் பிளானில் இடம் பெற்று, செயல்படுத்தப்படாத உத்தேச திட்டச்சாலைகள் உட்பட மேலும் பல புதிய இணைப்புச் சாலைகளை, உருவாக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களைக் குறிப்பிட்டு இந்த வரைவு, அதிலும் பல மாற்றங்களை பரிந்துரை செய்துள்ளது.
புதிய மாஸ்டர் பிளானில் கூறப்பட்டுள்ள திட்டங்களும், உறுதியாக நிறைவேற்றப்படுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
-நமது சிறப்பு நிருபர்-