மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பு கண்டுபிடிப்பு; சுரங்க பணி குறித்து முடிவெடுக்க முடியாமல் அரசு திணறல்
மூன்று மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பு கண்டுபிடிப்பு; சுரங்க பணி குறித்து முடிவெடுக்க முடியாமல் அரசு திணறல்
ADDED : டிச 15, 2025 05:41 AM

சென்னை: தமிழகத்தில், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், அதிக விலை மதிப்புள்ள கனிமங்கள் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இரும்புத்தாது, பாக்சைட்.
மேக்னசைட் போன்ற கனிமங்களும், கோவையில் படிக சுண்ணாம்புக்கல், அரியலுார், திருச்சி மாவட்டங்களில் புதை வடிவ சுண்ணாம்புக்கல்; கடலுார் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரி போன்றவையும் எடுக்கப்படுகின்றன.
திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உரிமைத்தொகை
தமிழக அரசின் கனிம வளத்துறை, இந்த கனிமங்களை சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. எந்த இடத்தில், என்ன கனிமம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த பரவலான ஆய்வு பணிகளை, மத்திய அரசின் புவியியல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்கிறது.
அரசு மற்றும் தனியார் நிலங்களில் கனிமங்களை எடுப்பதில், உரிமைத்தொகை அடிப்படையில், அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால், கனிமங்கள் எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில் அரசு எப்போதும் ஆர்வம் காட்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில இடங்களில், பிளாட்டினம் மற்றும் அது சார்ந்த கனிம படிவங்கள் இருப்பதை, மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.
எந்தெந்த பகுதியில், எவ்வளவு ஆழத்தில் எவ்வளவு கனிமங்கள் கிடைக்கும் என்ற விபரங்களை, இந்நிறுவனம் டிஜிட்டல் முறையில் தொகுத்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை, தமிழக அரசுக்கு மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம், 2016ல் அளித்தது. இருப்பினும், பிளாட்டினம் எடுக்க, சுரங்கங்களை அனுமதிப்பதில், மாநில அரசு இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிப்பதில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, பிளாட்டினம் எடுக்க அனுமதிப்பது தொடர்பாக, தமிழக அரசு முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், பிளாட்டினம் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் வந்துள்ளன.
அவசிய தேவை
அதுமட்டுமல்லாது, ஆஸ்மியம், இரிடியம், ருத்தேனியம், ரோடியம், பிளாட்டினம், பல்லேடியம் போன்ற பிளாட்டினம் தொகுதி கனிமங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை, மருத்துவம், மின்னணு தொழில்களில், பிளாட்டினம் அவசிய தேவையாக உள்ளது. அதுமட்டுமின்றி ஆபரணங்கள் தயாரிப்பதிலும், பிளாட்டினத்தின் தேவை அதிகமாக உள்ளது.
அதிக விலை மதிப்பு மிக்க கனிமங்களை எடுக்க, சுரங்கப் பணிகளை அனுமதிப்பதில், தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக, நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருகின்றன; விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

