கள்ள நோட்டு அச்சடித்த வி.சி., நிர்வாகி ஓட்டம்; வேறொரு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி
கள்ள நோட்டு அச்சடித்த வி.சி., நிர்வாகி ஓட்டம்; வேறொரு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி
UPDATED : ஏப் 01, 2025 04:18 AM
ADDED : ஏப் 01, 2025 04:15 AM

ராமநத்தம் : ராமநத்தம் அருகேவீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய வி.சி., கட்சி நிர்வாகியை தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 40; வி.சி., கட்சி கடலுார் மேற்கு மாவட்ட பொருளாளர்.
இவருக்கும், ஆவட்டியை சேர்ந்த சங்கர், 32 என்பவருக்கும் முன்விரோதவழக்கு ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க,நேற்று காலை, 5:15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர்.
அங்கு செல்வம் இல்லாததால், வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பியோடியது. சந்தேகமடைந்த போலீசார், அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு, கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், திட்டக்குடி, ஆலத்துார் நவீன்ராஜா, 29, அதர்நத்தம் கார்த்திகேயன், 28, என்பதும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம், 85,000 ரூபாய் கள்ள நோட்டுகள், நான்கு வாக்கி டாக்கி, இரு ஏர்கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நவீன்ராஜ், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்து, செல்வம் உட்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறுகையில், ''தப்பியோடிய செல்வத்தை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.