UPDATED : மார் 17, 2024 08:26 AM
ADDED : மார் 17, 2024 01:12 AM

பொள்ளாச்சி:தென்னைக்கு மாற்றாக, அவகோடா பழப்பயிர் சாகுபடியில், பொள்ளாச்சி விவசாயி ஈடுபட்டுள்ளார்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மற்றும் கேரள மாநில எல்லையோர பகுதியில், தென்னை மரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, நோய் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நோய் பாதித்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தேங்காய் விலை சரிவு, ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதலும் கைகொடுக்காததால், தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
![]() |
இந்நிலையில், தென்னை மரங்களுக்கு மாற்றாக, மாற்று பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், காளியப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாயி உதயகிரி காசியப்பன், அவகோடா பழப்பயிர் சாகுபடி செய்துள்ளார்.
இவர், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், அவகோடா செடி சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். தற்போது, நடவு செய்து மூன்று மாதமான செடிகளுக்கு, தடுக்கு கட்டி வெயிலில் இருந்து பாதுகாத்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
தென்னை சாகுபடியில் நோய் பாதிப்பை தொடர்ந்து, மாற்று பயிராக அவகோடா என்கிற வெண்ணெய் பழத்தில், 'ஹாஸ்' வகையான செடி சாகுபடி செய்துள்ளேன். இஸ்ரேலில் இருந்து இந்த செடி வாங்கி வந்து நடவு செய்தேன். அவகோடா பழப்பயிர் சாகுபடியை, இப்பகுதியில் முதல் முறையாக மேற்கொண்டுள்ளேன். மொத்தம், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், 450 பழச்செடிகள் சாகுபடி செய்துள்ளேன். பராமரிப்பது தான் முக்கியமான விஷயம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகே மகசூல் கிடைக்கும்.
இது நல்ல தரமானதாக இருப்பதுடன், சமையல் மற்றும் அழகு சாதன பொருட்கள், மருந்து தொழில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான மார்க்கெட்டிங் உள்ளது. வெளிநாடுகளில் இந்த பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


