பொங்கல் பரிசில் பொன்முடி பாகுபாடு: தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளிப்பு
பொங்கல் பரிசில் பொன்முடி பாகுபாடு: தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளிப்பு
ADDED : ஜன 19, 2026 04:46 AM

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, தி.மு.க., விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தவர், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி.
கட்சி அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, விழுப்புரம், வானுார் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுடன், விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக லட்சுமணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார்.
இதை பொன்முடி ரசிக்கவில்லை. ஏற்கனவே , விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும், பொன்முடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் சூழ்நிலையில், தற்போது லட்சுமணனும் எதிர் கோஷ்டியாக உருவாகி உள்ளார். இதனால், ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பொன்முடி தடுமாறுகிறார்.
வரும் சட்டபை தேர்தலில், தன் மகனை தேர்தலில் போட்டியிட வைத்து, அமைச்சர் பதவி பெற்றுத் தரவும் பொன்முடி முடிவு செய்துள்ளார். இந்நிலையில், பொங்கல் அன்று, விழுப்புரம் அறிவாலயத்தில், தொண்டர்களை பொன்முடி சந்திக்கிறார் என நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
பொங்கல் பரிசு பெரிதாக இருக்கும் என நினைத்து காத்திருந்தனர். ஆனால், தலா ஒரு காலண்டர் மட்டும் வழங்கினார்.
பொங்கல் அன்று மாலை திண்டிவனம், மயிலம், செஞ்சி தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளை, பொன்முடி உதவியாளர் தொடர்பு கொண்டுள்ளார்.உடனே அவர்கள், பொன்முடி வீட்டிற்கு சென்றபோது, அவர்களுக்கும் காலண்டர் வழங்கப்பட்டது.
ஆனால், மாட்டு பொங்கல் அன்று, பொன்முடியின் சொந்த கிராமமான தி.எடையார் கிராமத்தில், திருக்கோவிலுார் தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் வேட்டி - சேலை, காலண்டர், 100 ரூபாய் வழங்கி உள்ளார்.
இதை அறிந்த மற்ற தொகுதி நிர்வாகிகள் கோபம் அடைந்துள்ளனர். 'தங்களுக்கு ஒன்றும், திருக்கோவிலுருக்கு வேறு ஒன்றும் கொடுப்பதா' என கேட்டு கொந்தளிக்கின்றனர்.
- நமது நிருபர் -

