அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
UPDATED : பிப் 06, 2024 01:29 PM
ADDED : பிப் 06, 2024 06:48 AM

சென்னை: ''அமெரிக்காவில் உள்ள பழங்கால சிலைகளை மீட்பதில் அலட்சியம் செய்யாமல், கடத்தல்காரர்கள் மீது அந்நாட்டு போலீசார் பிறப்பித்துள்ள, 'வாரன்ட்' உத்தரவை அமல்படுத்த வேண்டும்,'' என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார்.
அவர் கூறியதாவது: நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக இருந்த போது, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான, சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூரை, 2012ல், ஜெர்மனியில் கைது செய்தோம். அதேபோல, சென்னையை சேர்ந்த அவரது கூட்டாளி தீனதயாளனையும் கைது செய்தோம்; ஆனால், அவர் இறந்து விட்டார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், சஞ்சீவ் அசோகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில், இந்த கும்பல் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு, 2,622 பழங்கால சிலைகள், கலைப்பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இவற்றில், 1,411 சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை, அந்நாட்டு போலீசார் மீட்டுள்ளனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் உள்ளன.
சிலைகளை மீட்பதில், தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அலட்சியமாக உள்ளனர். நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த போது, அமெரிக்காவில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கடத்தல் குறித்து விசாரிக்கும் 'ஹோம்லேண்ட் செக்யூரிட்டி' எனப்படும் போலீஸ் படையுடன் நல்ல நட்பு ஏற்பட்டது.
சுபாஷ் சந்திரகபூரிடம் நான் விசாரித்து அளித்த தகவல் அடிப்படையில் தான், ஹோம்லேண்ட் செக்யூரிட்டி பிரிவு போலீசார், அமெரிக்காவில் சோதனை நடத்தி, கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால பொருட்களை மீட்டனர். சிலைகளை மீட்பதில், இரு நாட்டு உறவு சுமூகமாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போது தான், குற்றவாளிகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
அதன் அடிப்படையில், ஹோம் லேண்ட் செக்யூரிட்டி பிரிவு போலீசார், 'சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ் உள்ளிட்டோரை கைது செய்து, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, 2020ல், நியூயார்க் நீதிமன்றத்தில், 'வாரன்ட்' பெற்றுள்ளனர்.
அது, நம் நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வாரன்டை தமிழக போலீசார் அமல்படுத்த வேண்டும். அப்போது தான், சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால், அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகளின் தொன்மையான அடையாளங்கள் மற்றும் அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது உள்ளிட்ட விபரங்களை அறிய முடியும்.
தொன்மையான அடையாளங்களை அழிப்பதை தொழிலாக செய்து வந்த, அந்நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் சால்மன், நீலம் பாரிஸ் மெத் ஆகியோரை கைது செய்தும், தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க முடியும். இனியும், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாமதிக்காமல், அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

