விஜய் பக்கம் போன பிரசாந்த் கிஷோர்: அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.,
விஜய் பக்கம் போன பிரசாந்த் கிஷோர்: அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.,
ADDED : பிப் 13, 2025 07:06 AM

மதுரை: மீண்டும் ஆட்சியை பிடிக்க அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் அ.தி.மு.க., 'டீலிங்' பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவரோ த.வெ.க., பக்கம் சென்று, அக்கட்சித் தலைவர் விஜயை சந்தித்து பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. 2011 முதல் 10 ஆண்டுகள் வரை அ.தி.மு.க., ஆட்சி இருந்த நிலையில், 2021ல் தி.மு.க., ஆட்சி அமைந்தது. உட்கட்சி பிரச்னை, கட்சியில் பிளவு போன்ற காரணங்களால் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில் அடுத்தடுத்து அ.தி.மு.க.,விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அ.தி.மு.க., ஓட்டுகளை பிரித்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று, தன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என பழனிசாமி, பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் அரசியல் ஆலோசகரும், தி.மு.க., ஆட்சி அமைய பல 'டிப்ஸ்'களை கொடுத்தவருமான 'ஐபேக்' நிறுவனர் பிரசாந்த் கிஷோரிடம், அ.தி.மு.க., தரப்பில் 'டீலிங்' பேசப்பட்டது.
சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தான், ஏற்கனவே தி.மு.க.,வுக்காக வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை தமிழகம் அழைத்து வந்தவர். கிஷோர் வகுத்துக் கொடுத்த ஆலோசனைபடியே, கடந்த சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க., வெற்றியடைந்தது.
இதனாலேயே, இம்முறை பிரஷாந்த் கிஷோரை வியூக வகுப்பாளராக அமைத்துக்கொள்ள, அ.தி.மு.க., தலைமை விரும்பி பேச்சு நடத்தியது. இந்நிலையில், சமீபத்தில் த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் பதவியை பெற்ற ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோரை த.வெ.க., பக்கம் கொண்டு சென்று விட்டார். இது, அ.தி.மு.க., தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

