மூப்பனார் பிரதமராக வருவதை தடுத்தது மிகப்பெரிய துரோகம்: மத்திய நிதி அமைச்சர்
மூப்பனார் பிரதமராக வருவதை தடுத்தது மிகப்பெரிய துரோகம்: மத்திய நிதி அமைச்சர்
ADDED : ஆக 31, 2025 04:40 AM

சென்னை : ''மூப்பனார் பிரதமராக வருவதை தடுத்தது, மிகப்பெரிய துரோகம். வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசினார்.
த.மா.கா., நிறுவனரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, மறைந்த மூப்பனாரின் 24வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நடந்த புகழஞ்சலி கூட்டத்தில், தலைவர்கள் பேசியதாவது:
ஜி.கே.வாசன்: மூப்பனாரின் நினைவு நாளில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இது, 2026ல் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம். ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்.
பழனிசாமி: மறைந்தும் மக்கள் மனதில் மூப்பனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரசில் இருந்த போது, அகில இந்திய அளவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். தேசிய தலைவராக விளங்கிய அவர், எளிமையானவர்; அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். கட்சி பேதமின்றி யார் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் பங்கேற்கக்கூடியவர். அவர், 1996ல் த.மா.கா., கட்சியை துவக்கி, திறம்பட வழி நடத்தினார். தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்ய, தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
நிர்மலா சீதாராமன்: தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது. அவர் ஒரு தமிழனாக டில்லியில் ஆளுமையுடன் இருந்தார். அவருக்கு நாடு முழுதும், மதிப்பும், மரியாதையும் இருந்தது. பீஹார், ஹரியானா மாநிலம் உள்ளிட்ட மற்ற மாநிலத்தவருக்கு அவரை தெரியாது என்றெல்லாம் கிடையாது. நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், அவரது வார்த்தைக்கு மதிப்பு இருந்தது.
அவர் பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. அவருக்கு ஆதரவு தராமல், அதை தடுத்த சக்திகள் யார் என்பது நாட்டுக்கே தெரியும். இன்று தமிழகம், தமிழ் தமிழ் கலாசாரம் என, திரும்ப திரும்ப பேசுவோர், ஒரு தமிழன் பிரதமராக வேண்டிய தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர்; இதை மறந்துவிட முடியாது.
மூப்பனாரை தடுத்தது மிகப்பெரிய துரோகம். மூப்பனார் கொள்கைக்கு ஏற்ற மாதிரி நல்லாட்சி அமைய, நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து, அதற்கான முயற்சியை, இந்த கூட்டணி வாயிலாக எடுத்து போக வேண்டிய கடமை உள்ளது. நல்லாட்சி கொடுங்கள் என தமிழக மக்கள் கேட்கின்றனர். போதை எங்களுக்கு வேண்டாம். மது என்னும் அரக்கன் தமிழகம் முழுதும் நிறைந்துள்ளான். ஆனால், அதை வைத்தும், ஒரு குடும்பம் பிழைத்து கொண்டிருக்கிறது. இப்படிபட்ட மோசமான நிலையில் தான் தமிழகம் உள்ளது. இப்படியொரு அவலத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றுவதும், அவர்களுக்காக தொண்டாற்றுவதும் நம் கடமை. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும். கூட்டணி வாயிலாக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.
* நயினார் நாகேந்திரன்: வரும் 2026 தேர்தலில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு விரட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் அளித்த பேட்டி:
மூப்பனாருக்கும், விஜயகாந்துக்கும் 40 ஆண்டுகள் நட்பு இருந்தது. வாசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டது வாசனுக்கும், எங்களுக்கும் இடையே இருக்கும் நட்பு. அதனால், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பது, மூப்பனார் குடும்பத்தினர் மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதையின் வெளிப்பாடு. அதனால், தே.மு.தி.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நாங்கள் யாரோடு கூட்டணி சேரப் போகிறோம் என்பது குறித்து, வரும் 2026 ஜன., 9ல் கடலுார் மாநாட்டில் அறிவிப்போம். தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜர் சிலைக்கு நிர்மலா சீதாராமன் மரியாதை
தமிழகம் வந்த நிர்மலா சீதாராமன், நேற்று காலை தி.நகரில், மறைந்த நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் சென்றார். அங்கு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.