2029 தேர்தலுக்கு இப்போதே தயார்படுத்தும் பிரதமர் மோடி
2029 தேர்தலுக்கு இப்போதே தயார்படுத்தும் பிரதமர் மோடி
ADDED : அக் 12, 2025 12:19 AM

புதுடில்லி: மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி செயலராக பணியாற்றுகிறார். இப்படி, 85 துறைகளின் செயலர்களையும், சமீபத்தில் தன் வீட்டிற்கு அழைத்தாராம் பிரதமர் மோடி. எதற்காக இந்த அழைப்பு; என்ன விவாதிக்கப் போகிறார் என, எவ்வித அறிவிப்பும் இல்லையாம்.
பிரதமர் வீட்டில், இந்த 85 செயலர்கள் கூடியதும், தன் 25 ஆண்டு கால அரசியல் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டாராம் மோடி. பார்லிமென்ட் தேர்தலின்போது, பா.ஜ.,வின் வாக்குறுதிகளில் எத்தனை செயல்படுத்தப்பட்டு உள்ளன.
நிலுவையில் உள்ள திட்டங்கள், அவை எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து, ஒவ்வொரு துறையும் பட்டியலை தருமாறு கேட்டுக் கொண்டாராம் பிரதமர்.
'செயலர்கள் என்ன வேண்டுமானாலும், தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசலாம்' என மோடி சொல்ல, சில செயலர்கள் மனம் திறந்து பேசினராம். இந்த செயலர்களுடன், உளவுத்துறை தலைவர், 'ரா' அமைப்பின் தலைவர் ஆகியோரும் பங்கேற்றனராம்.
'ஸ்டார்ட் அப்'களுக்கு அரசு அதிகமாக உதவ வேண்டும்; இளைஞர்கள் அதிக அளவில் இந்த ஸ்டார்ட் அப்களை துவங்க வேண்டும். இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எனக்கு தர வேண்டும்' என, செயலர்களிடம் வேண்டுகோள் வைத்தாராம் பிரதமர்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம். செயலர்களுடன், குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டாராம்.
கடைசியில், அனைவரும் விடைபெறும் போது, -'நீங்கள், உங்கள் பணி ஓய்வுக்கு பின், புத்தகம் எழுதினால் இந்த கூட்டத்தில் நாம் பேசியதையெல்லாம் தயவுசெய்து எழுத வேண்டாம்' - என, கேட்டுக் கொண்டாராம் மோடி.
'அடுத்த பார் லிமென்ட் தேர்தலுக்கு மோடி இப்போதே தயாராகிவிட்டாரே...' என, செயலர்கள் பேசிக் கொண்டனராம்
.