பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் மினி பஸ் இயக்க ஆர்வம் காட்டாத தனியார்
பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் மினி பஸ் இயக்க ஆர்வம் காட்டாத தனியார்
ADDED : பிப் 18, 2025 06:46 AM

சென்னை; அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண திட்டம் இருப்பதால், மினி பஸ்கள் இயக்க, தனியார்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.
புதிய மினி பஸ் திட்டத்துக்கு, தமிழக அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும், 3,000க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மினி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணியர் அதிகம் செல்லும் வழித்தடங்களை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை, 1,000 வழித்தடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தற்போது, 1,000 வழித்தடங்களை தேர்வு செய்து, விருப்பமுள்ளவர்கள் மினி பஸ்களை இயக்கலாம் என, மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஒரு வாரமாக மினி பஸ்களை இயக்க, பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இலவச பயண திட்டம் இருப்பதால், பெண்கள் பெரும்பாலும் அரசு டவுன் பஸ்களுக்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர். அதேபோல, மினி பஸ்களுக்கான புதிய கட்டணங்கள் குறைவு என்றும் கூறப்படுகிறது. இதனால், தனியாரிடம் ஆர்வம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தயக்கம் ஏன்?
மினி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: டீசல் விலை, உதிரி பொருட்கள் விலை உயர்வால், நாங்கள் பெரும் நஷ்டத்தில், மினி பஸ்களை இயக்கி வருகிறோம். புதிய விதிமுறையில் கூடுதல் துாரம் இயக்க அனுமதி கிடைக்கும் என்றும், கட்டணங்கள் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்த்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஒரு மினி பஸ் வாங்கி இயக்க, குறைந்தபட்சம், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கட்டணமில்லாத பயண திட்டத்தை மினி பஸ்சிலும் அமல்படுத்தி, அதற்கான தொகையை அரசு வழங்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.