ADDED : நவ 29, 2024 04:38 AM

சமீபத்தில் நடந்த கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா வெற்றி பெற்றார்.இந்நிலையில் நேற்று காலை டில்லி ஜன்பத் இல்லத்தில் இருந்து, தாய் சோனியாவிடம் ஆசி பெற்று, சகோதரர் ராகுலுடன் ஒரே காரில், பார்லிமென்டிற்கு பிரியங்கா வந்து சேர்ந்தார். அவர், கேரள பாரம்பரிய உடையான வெள்ளை கலரில், தங்க நிற பார்டர் போட்ட சேலை உடுத்தி வந்தார்.
பிரியங்கா முதல்முறையாக எம்.பி.,யாக பதவி ஏற்பதை காண, அவரது தாயும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, மகன், மகள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். காலையில் லோக்சபா கூடியதும் முதல் அலுவலாக, சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தவுடன், கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி, பதவி உறுதி ஏற்பு மொழியை பிரியங்கா ஹிந்தியில் வாசித்தார்.
![]() |
பின், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இருந்த ராகுலுக்கு வணக்கம் சொல்ல, பதிலுக்கு வணக்கம் சொன்ன ராகுல், என்ன நினைத்தாரோ தெரியவில்லை; எழுந்து சென்று சகோதரியை கட்டியணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். பதவி ஏற்றுக் கொண்ட பின் முதல் அலுவலாக அமளியில் ஈடுபட்டார் பிரியங்கா.
மிகவும் கூச்சப்பட்டு கொண்டிருந்த பிரியங்காவை, அனைவரும் பிடித்து தள்ளாத குறையாக, சபையின் முன்பகுதிக்கு அழைத்துச் சென்று, சக எம்.பி.,க்களோடு நிற்க வைத்தனர். கோஷங்கள் போட பிரியங்காவை வலியுறுத்தியபோது, சிரித்தபடியே தயங்கி தயங்கி நின்றார். பார்லிமென்டிற்கு வந்த பிரியங்காவை, அவரது சகோதரர் ராகுல் மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார்.
- நமது டில்லி நிருபர் -


