மந்தகதியில் மின் வழித்தட திட்டம்; மத்திய அரசு நிதி பெறுவதில் சிக்கல்
மந்தகதியில் மின் வழித்தட திட்டம்; மத்திய அரசு நிதி பெறுவதில் சிக்கல்
UPDATED : டிச 19, 2024 02:46 AM
ADDED : டிச 18, 2024 09:19 PM

சென்னை: நாடு முழுதும் மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, மத்திய அரசு, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சீராக மின் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக விவசாயத்திற்கு தனி வழித்தடம், ஒரே இடத்தில் இருக்கும் இரு டிரான்ஸ்பார்மர்களின் உயர் மின்னழுத்த அமைப்பை பிரித்து அமைத்தல், துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை, 9,245 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள மின் வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில், 6,360 கோடி ரூபாய் கடன் மீதியை, மின் வாரியம் மத்திய நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக வாங்கலாம்.
பணிகளை இந்த நிதியாண்டிற்குள் முடித்து விட்டால், 6,360 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. இல்லையெனில் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். மேற்கண்ட திட்ட பணிகள், 2023 - 24ல் துவங்கிய நிலையில், மந்தகதியில் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.
இதனால், மத்திய அரசிடம் இருந்து இதுவரை, 600 கோடி ரூபாய்க்கு குறைவாகவே பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன; கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், லோக்சபா தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், மறுசீரமைக்கப்பட்ட திட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டது; காலக்கெடுவுக்குள் முடிக்க அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன' என்றார்.