ADDED : ஜன 21, 2024 06:36 AM

சமீபத்தில், மஹாராஷ்டிராவிலிருந்து இளைய காங்., தலைவர் மிலிந்த் தியோரா விலகி, ஆட்சியில் உள்ள, ஏக்நாத் ஷிண்டேவின், சிவசேனா கட்சியில் இணைந்தார்; இது, டில்லி காங்., தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
காரணம், மிலிந்த் தியோராவின் தந்தை முரளி தியோரா, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்; ராஜிவிற்கு நெருக்கமானவர். 'மிலிந்த் தியோராவைத் தொடர்ந்து, வேறு சில தலைவர்களும் காங்கிரசிலிருந்து வெளியேறுவர்' என, கூறப்படுகிறது. மிலிந்த் உட்பட பல மஹாராஷ்டிர தலைவர்கள், ராகுலை சந்திக்க முயற்சித்தும், அவரைப் பார்க்க முடியவில்லையாம்.
'சுஷில் குமார் ஷிண்டே, முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவுகான் ஆகியோரும் காங்கிரசிலிருந்து விலகுவர்' என, செய்திகள் அடிபடுகின்றன; இதை மறுத்துள்ளார், சுஷில் குமார் ஷிண்டே. இவருடைய மகள், கட்சியின் மாநில செயல் தலைவராக உள்ளார். எங்கே பா.ஜ., இவரது தந்தையை இழுத்துக் கொண்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில், மகளுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது, கட்சி தலைமை.
'ராகுல், கட்சி தலைவர்களை சந்திப்பதில்லை' என, பல தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றனர். 'இது தொடர்ந்தால், பல மாநிலங்களிலிருந்து, பல தலைவர்கள் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளன' என்கின்றனர்.

